தனியாரிடம் மாநகராட்சி கழிப்பறை பராமரிப்பு ஒப்படைப்பு பூங்காக்களுக்கு இரவு காவலர்கள் நியமனம்

சென்னை மாநகராட்சில், 975க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள பொது கழிப்பறைகளின் பராமரிப்பை, தனியாரிடம் ஒப்படைக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. அதேநேரம், கட்டணமில்லா சேவை தொடரும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது. பூங்காக்கள் பராமரிப்பை தனியாரிடம் ஒப்படைக்காமல், மாநகராட்சியே மேற்கொள்ள உள்ளது.

சென்னை மாநகராட்சி பகுதிகளில் வசிக்கும் மக்கள் தொகை, ஒரு கோடியை நெருங்கி உள்ளது. அத்துடன், புறநகர் மற்றும் பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து தினமும், 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.

மாநகரம் பல்வேறு வளர்ச்சி நிலையை அடைந்தாலும், பொது இடங்களில் சிறுநீர் கழிக்கும் அசுத்த நிலை தொடர்கிறது.

ஆக்கிரமிப்பு

இவற்றை தடுக்க, பேருந்து நிறுத்தம், சந்தை பகுதிகள் உள்ளிட்ட, 300க்கும் மேற்பட்ட இடங்களில், இருபாலருக்கான சிறுநீர் கழிக்கும் இடம் ஏற்படுத்தப்பட்டது. அவற்றை மாநகராட்சி முறையாக பராமரிக்காததால், பொதுமக்கள் பயன்படுத்தவில்லை.

இதனால், நீர்நிலையோரங்கள், குப்பை தொட்டி பகுதிகள், திறந்தவெளி மற்றும் புதர்மண்டிய இடங்கள் உள்ளிட்ட மறைவான பகுதிகளில், சுகாதாரமற்ற முறையில் சிறுநீர், மலம் கழிப்பது தொடர்ந்து வருகிறது

இந்நிலையில், மாநகராட்சி கழிப்பறைகளை சுகாதாரமாக பராமரிக்க, பொது – தனியார் கூட்டாண்மை பங்களிப்பு திட்டத்தை, 1,202 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதற்காக, தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

அதன்படி, ராயபுரம், திரு.வி.க., நகர் மண்டலங்கள் மற்றும் மெரினா கடற்கரையில், 372 இடங்களில் உள்ள, 3,270 கழிப்பறை இருக்கைகள், 430.11 கோடி ரூபாய் மதிப்பில், தனியாரிடம் விடப்பட்டு, புதிய கழிப்பறைகள் கட்டுவதுடன், பராமரிக்கப்பட்டு வருகிறது.

மீதமுள்ள மண்டலங்களில், மாநகராட்சி சுகாதார பணியாளர்கள் பராமரித்து வருகின்றனர். ஒருசில இடங்களில், உள்ளூர் அரசியல்வாதிகள் மற்றும் கவுன்சிலர்களின் துணையுடன், சிலர் ஆக்கிரமித்து கட்டணம் வசூலித்து வருகின்றனர்.

கண்காணிப்பு

இவற்றை தவிர்க்கும் வகையிலும், பொது கழிப்பறைகளை சுகாதாரமாக பராமரிக்கும் வகையிலும், சென்னை மாநகராட்சி முழுதும் உள்ள அனைத்து கழிப்பறைகள் பராமரிப்பை, ஒப்பந்த அடிப்படையில் தனியாரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

அதன்படி, திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை மண்டலங்களில், 285 இடங்களில் உள்ள, 2,301 சமுதாய மற்றும் பொதுக்கழிப்பறைகள், 362.60 கோடி ரூபாய் மதிப்பில் மேம்படுத்தப்பட உள்ளது.

அதேபோல், அம்பத்துார், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் மண்டலங்களில், 395 இடங்களில் உள்ள, 2,760 கழிப்பறைகள், 455.43 கோடி ரூபாய்; வளசரவாக்கம், ஆலந்துார், அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லுார் மண்டலங்களில், 322 இடங்களில் உள்ள, 2,105 கழிப்பறைகள், 383.97 கோடி ரூபாய் மதிப்பில் மேம்படுத்தப்படும்.

இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

தனியாரிடம் விடப்படும் மாநகராட்சி கழிப்பறைகள், பராமரிப்பு செலவினங்கள், செயல்பாடு அளவீடுகள் அடிப்படையில், தனியார் பொறியாளர் என்ற கலந்தாலோசகர் வாயிலாக கண்காணிக்கப்படுவர்.

கட்டணமில்லா சேவை

இதற்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், மாநகராட்சி மன்ற கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.

தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படும் கழிப்பறைகள் சீரமைக்கப்படுவதுடன், புதிய இடங்களிலும் கழிப்பறை கட்டப்படும். பராமரிப்பு செலவை மாநகராட்சியே ஏற்பதால், பொதுமக்களுக்கான கட்டணமில்லா சேவை தொடரும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

அதேநேரம் பூங்காக்கள் பராமரிப்பை தனியாரிடம் ஒப்படைக்கப்படாது; மாநகராட்சியே மேற்கொள்ளும் முடிவுக்கு வந்துள்ளது.

 

தனியாரிடமும் சுகாதாரமில்லை!

ராயபுரம், திரு.வி.க.நகர் மண்டலங்கள், மெரினா கடற்கரைகளில் உள்ள கழிப்பறையை தனியார் நிறுவனங்கள் பராமரித்து வருகின்றன. அதற்காக, 430 கோடி ரூபாய் மாநகராட்சி வழங்கியும், முறையாக கழிப்பறைகள் பராமரிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பல இடங்களில், மூக்கை மூடி கொள்ளும் வகையில், துர்நாற்றம் வீசுகிறது. இவற்றை மாநகராட்சி அதிகாரிகளும் முறையாக கண்காணிக்கவில்லை என, அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

அரசு அனுமதி மறுப்பு?

சென்னை மாநகராட்சியில் உள்ள, 595 பூங்காக்கள், அ.தி.மு.க., ஆட்சியில் தனியார் பராமரிப்பில் விடப்பட்டன. ஆட்சிக்கு மாற்றத்திற்குப்பின், ஒப்பந்ததாரர்களுக்கு பல்வேறு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டது. அதேநேரம், ஒப்பந்த காலமும் கடந்தாண்டுடன் முடிந்தது. தற்போது மாநகராட்சியே பராமரித்து வருகிறது. இந்நிலையில், தனியாரிடம் ஒப்பந்தம்விட அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. அதற்கு அரசு செவிசாய்க்காத நிலையில், அதுவரை பூங்காக்களை பராமரிக்க, இரவு நேர காவலர் நியமிக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *