ஆடிப்பெருக்கில் ஆடி அசத்திய கல்லூரி மாணவிகள்
ஆடிப்பெருக்கு கொண்டாட்டம்
ஆடி மாதம் என்பது அம்மனுக்கு உகந்த மாதம் ஆகும். இந்த மாதம் முழுவதும் அம்மன் கோவில்களில் மிகவும் விமரிசையாக கொண்டாடுவது வழக்கம். கிராமப்புறங்களில் இந்த விழாக்கள் தொன்று தொட்டு நடைபெற்று வருகிறது. நகர்ப்புறங்களிலும் ஆடி கொண்டாட்டங்களை பிரதிபலிக்கும் வகையில் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர்-ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நேற்று ஆடிப்பெருக்கு கொண்டாட்டம் கோலாகலமாக நடந்தது.
தமிழர்களின் பாரம்பரிய முறையில் கொண்டாடப்பட்ட இந்த நிகழ்ச்சியில் மாணவிகள் பாவாடை-தாவணி மற்றும் சேலைகளில் வலம் வந்தது, கண்ணை கவரும் வகையில் இருந்தது. இந்த திருவிழாவுக்காக அமைக்கப்பட்ட சிறிய குளத்தில் மாணவிகள் அகல் விளக்குகளில் தீபம் ஏற்றி மிதக்கவிட்டனர். இதைத்தொடர்ந்து பல்வேறு விதமான சாதங்கள் அடங்கிய சித்ரா அன்னம் மற்றும் வீட்டில் தயாரிக்கப்பட்ட பிற தின்பண்டங்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்து சாப்பிட்டு மகிழ்ந்தனர்
நடனமாடி அசத்திய மாணவிகள்
ஆடிப்பெருக்கு கொண்டாட்டத்தின் உச்சகட்டமாக மாணவிகளின் கிராமிய நடன நிகழ்ச்சி அமைந்தது. கரகாட்டம், கும்மி மற்றும் ஒயிலாட்டம் ஆடி மாணவிகள் அசத்தினர். அதுமட்டுமல்லாமல் அம்மன் வேடத்தில் கலாசார உடை அலங்காரம், கோலப்போட்டிகள் நடந்தது. இதுதவிர வளையல் கடை, மருதாணி சேவை போன்ற கிராமத்து திருவிழா கடைகள் இடம் பெற்றிருந்தன. மாணவிகளின் கைவண்ணத்தில் உருவான கைவினை பொருட்கள், தின்பண்ட கடைகள் கொண்டாட்டத்துக்கு மேலும் எழில் கூட்டியது. ஒட்டுமொத்தத்தில் தமிழர்களின் பாரம்பரிய வாழ்க்கை முறையை நினைவுப்படுத்துவதாக இந்த நிகழ்ச்சி அமைந்தது.
இதுகுறித்து டாக்டர் எம்.ஜி.ஆர்-ஜானகி மகளிர் கல்லூரியின் தலைவர் குமார் ராஜேந்திரன் கூறுகையில், ‘மனித சமுதாயத்தின் முன்னேற்றம் மற்றும் அமைதியான வாழ்க்கைக்கு நமது பாரம்பரிய கலாசாரத்தை பாதுகாப்பதுடன், வரலாற்றையும் அறிந்துகொள்வது அவசியம். இதுபோன்ற விழாக்கள் வாயிலாக தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் நமது கலாசாரத்தின் மகத்துவத்தை இளைய தலைமுறையினர் தெரிந்துகொள்வார்கள். தமிழர் பண்பாட்டை, இளைய தலைமுறையினருக்கும் அறிமுகப்படுத்தும் முயற்சியின் ஒர் அங்கம் தான் இந்த கொண்டாட்டங்கள்” என்றார்.