கோயம்பேடு மார்க்கெட்டில் வெளியாட்கள் நடமாட்டத்தை கண்காணிக்க 24 மணிநேர குழு
அண்ணாநகர்: சென்னை கோயம்பேடு அங்காடி நிர்வாக முதன்மை அலுவலர் இந்துமதி நேற்று முன்தினம் கோயம்பேடு உணவுதானிய மார்க்கெட்டில் ஆய்வு செய்தார். அப்போது அவர், வியாபாரிகளை நேரில் சந்தித்து வெளியாட்கள் மற்றும் வட மாநில இளைஞர்கள் சுற்றிவருவது பற்றி விசாரணை நடத்திவிட்டு சந்தேகத்திற்கிடமான வகையில் தங்கியிருந்த ஆட்களை விரட்டி அடித்தார். மேலும் மொட்டை மாடியில் வசித்துவந்த நபர்கள் கூலி தொழிலாளர்களா, வெளியாட்களாக என்று விசாரித்தார். அப்போது வியாபாரிகள், கூலி தொழிலாளர்களாக இல்லாதவர்களை கண்டுபிடித்து கடுமையாக எச்சரித்து விரட்டியடித்தனர். இதுபோல் கோயம்பேடு காய்கறி, பூக்கள், பழம் மற்றும் உணவு தானிய மார்க்கெட்டில் இரவு நேரங்களில் வெளியாட்கள், வட மாநில இளைஞர்களை கண்காணிப்பதற்கு அங்காடி நிர்வாகம் மூலம் தனி குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவினர் 24 மணி நேரமும் கோயம்பேடு மார்க்கெட்டை ஆய்வு செய்து வெளி நபர்களின் நடமாட்டத்தை கண்டுபிடித்து விரட்டியடிப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.