சென்னையில் முதல்வர் மருந்தகம் செயல்படும் 39 இடங்கள் எவை? சந்தை மதிப்பை விட 50 முதல் 75 சதவீதம் வரை குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்கும்
சென்னை: சென்னையில் முதல்வர் மருந்தகம் செயல்படும் 39 இடங்கள் எவை என்ற முழு விவரம் வெளியிடப்பட்டுள்ளது. முதல்வர் மருந்தகங்களில் அனைத்து மருந்துகளும் சந்தை மதிப்பை விட 50 முதல் 75 சதவீதம் வரை குறைந்த விலையில் விற்கப்படுகிறது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தமிழகம் முழுவதும் 1000 முதல்வர் மருந்தகங்களை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். மேலும் சென்னை பாண்டிபஜாரில் உள்ள முதல்வர் மருந்தகத்திற்கு சென்று விற்பனையையும் அவர் தொடங்கி வைத்தார்.
புதிதாக தொடங்கப்பட்டுள்ள முதல்வர் மருந்தகங்களுக்கு தேவையான ஜெனரிக் மருந்துகள் தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்தால் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்படுகிறது. மருத்துவம் சார்ந்த இதர மருத்துவ உபகரணங்கள், சித்தா, ஆயுர்வேதம், இம்காப்ஸ், டாம்கால் மற்றும் யுனானி மருந்துகள், சர்ஜிக்கல்ஸ் மற்றும் நியூட்ரா ஜீட்டிக்கல்ஸ் உள்ளிட்ட மருந்து வகைகள் தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையத்தால் கொள்முதல் செய்து மருந்தகங்களுக்கு வழங்கப்படுகிறது. வெளிச்சந்ததையை விட 75 சதவீதம், மத்திய அரசின் மருந்தகங்களை விட 20 சதவீதம் வரை குறைவாக முதல்வர் மருந்தகங்களில் மருந்துகள் விற்கப்படுகிறது.
மொத்தம் 762 மருந்து வகைகள் அறுவை சிகிச்சைக்கான மருந்துகளும் இங்கு கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏசி வசதியுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த மருந்தகங்களில் ஜெனரிக் மருந்துகள் மட்டுமல்ல, சர்ஜிக்கல்ஸ் சித்தா, ஆயுர்வேதம், யுனானி மற்றும் பிற மருந்துகள் குறைந்த விலையில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சர்க்கரை நோயை கட்டுப்படுத்த விற்பனை செய்யப்படும் 30 மாத்திரைகள் கொண்ட ஒரு அட்டை வெளி மார்க்கெட்டில் 70 ரூபாய் ஆகும். ஆனால் முதல்வர் மருந்தகத்தில் ரூ.11க்கு கிடைக்கிறது.
பிரதமர் பெயரிலான மக்கள் மருந்தகத்தில் இது ரூ.30க்கு விற்கப்படுகிறது. அதாவது தனியார் மருந்து கடைகளில் மருந்து மாத்திரைக்காக மட்டும் மாதம் ரூ.3 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரம் வரை செலவழிக்கும் நிலை ஏற்பட்டது. இனிமேல் முதல்வர் மருந்தகத்தில் 1000 ரூபாய் இருந்தால் இந்த மருந்துகளை வாங்க முடியும். அதாவது மாதந்தோறும் 50 முதல் 75 சதவீத தொகையை மருந்து வாங்குவதில் சேமிக்க முடியும் நிலை உருவாகியுள்ளது. முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து குறைந்த விலையில் மருந்துகளை வாங்கி சென்றனர்.
சென்னையில் 39 முதல்வர் மருந்தகம் செயல்படும் இடங்கள் பற்றிய விவரம் பின்வருமாறு:
1. கொன்னூர் நெடுஞ்சாலை அயனாவரம்.
2. ஆர்.வி.நகர் கடைசி மெயின் சாலை கொடுங்கையூர்.
3. மன்னார்சாமி கோயில் தெரு புளியந்தோப்பு.
4. திருப்பதி கூடல் ரோடு, கலைவாணர்நகர் அம்பத்தூர்.
5. கோவிந்தன் தெரு மேட்டுப்பாளையம் அருந்ததியர் நகர்.
6. காந்தி தெரு, கே.எம்.நகர் கொடுங்கையூர்.
7. கற்பகவிநாயகர் கோயில் தெரு சென்னை.
8. நாட்டு பிள்ளையார் கோயில் தெரு ஏழுகிணறு.
9. கல்யாணபுரம் தெரு சூளைமேடு.
10. சேமியர்ஸ் சாலை நந்தனம்.
11. லேண்டன்ஸ் சாலை கீழ்ப்பாக்கம்.
12. காமராஜபுரம், பாண்டிதுரை தெரு வேளச்சேரி.
13. வீரராகவராவ் தெரு திருவல்லிக்கேணி.