லாரியில் இருந்து விழுந்த ஓட்டுனர் சக்கரத்தில் சிக்கி பலி
திருவொற்றியூர்:கடலுார் மாவட்டம், கீரப்பாளையத்தைச் சேர்ந்தவர் ரமேஷ், 54; கன்டெய்னர் லாரி ஓட்டுனர். நேற்று காலை, எண்ணுாரில் இருந்து, மாதவரம் நோக்கி, கன்டெய்னர் லாரியை ஓட்டிச் சென்றார்.
மணலி விரைவு சாலை, பகிங்ஹாம் கால்வாய் அருகே சென்று கொண்டிருந்த லாரி, சாலையோரம் நின்றிருந்த மற்றொரு லாரியில் உரசி விபத்துக்குள்ளானது.
பின், தறிக்கெட்டு ஓடிய கன்டெய்னர் லாரியில் இருந்து ஓட்டுனர், தவறி கீழே விழுந்தார். அவர் ஓட்டி வந்த கன்டெய்னர் லாரியின் பின்சக்கரத்தில் சிக்கி, ரமேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார்.
மேலும் தறிகெட்டு ஓடிய கன்டெய்னர் லாரி, சாலையோர கம்பம் ஒன்றில் மோதி நின்றது.
தகவலறிந்த, சாத்தாங்காடு போலீசார், இறந்தவரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனை அனுப்பி விசாரிக்கின்றனர்.