சாலையில் கட்டி வைத்திருந்த மாட்டை பிடித்து சென்ற அதிகாரிக்கு மிரட்டல்: ஆடியோ வைரல், போலீசில் புகார்
தண்டையார்பேட்டை பிப்.24: யானைக்கவுனி பகுதியில் தினேஷ் என்பவர், தனக்கு சொந்தமான மாட்டை, சாலையில் கட்டி வைத்துள்ளதாகவும், இதனால், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுவதாகவும், 5வது மண்டல மாநகராட்சி அதிகாரிக்கு புகார்கள் வந்தன. அதன்பேரில், சுகாதார ஆய்வாளர் இஸ்மாயில் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, விதிமீறி சாலையில் கட்டி வைத்திருந்த மாட்டை பிடித்து சென்றனர்.
இந்நிலையில், யானைக்கவுனி ஹவுஸிங் போர்டு பகுதியை சேர்ந்த சங்கர் என்பவர், சுகாதார ஆய்வாளரை செல்போனில் தொடர்பு கொண்டு, பிடித்து சென்ற மாட்டை விடுவிக்க வேண்டும், என்று கூறியுள்ளார். அதற்கு அவர், அபராதம் செலுத்தினால் தான் மாடு விடுவிக்கப்படும், என்று கூறியுள்ளார்.
அதற்கு அந்த நபர், ‘ஒழுங்கு மரியாதையாக மாட்டை விடுவிக்காவிடில், உன்னை கொலை செய்து விடுவேன், என்று மிரட்டியுள்ளார். இதுகுறித்து சுகாதார அதிகாரி கொடுத்த புகாரின் பேரில், போலீசார் விசாரணை நடத்திய வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் சுகாதார ஆய்வாளரிடம் சங்கர் என்பவர் செல்போனில் பேசும் ஆடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.