நாட்டின் மீது பற்று கொண்டவராக பத்திரிகையாளர் இருக்க வேண்டும் நாகலாந்து கவர்னர் இல.கணேசன் பேச்சு
சென்னை, ‘நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஜர்னலிசம்’ சார்பில் அதில் படித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சியும், ‘தாமரை பிரதர்ஸ்’ பதிப்பகத்தின் சார்பில், தீபா எழுதிய, ‘நகரேஷு காஞ்சி’ புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியும், சென்னையில் நேற்று நடந்தது.
இதில், ‘தினமலர்’ நாளிதழ் இணை இயக்குநர் ஆர்.லட்சுமிபதி சார்பிலும், நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஜர்னலிசம் சார்பிலும், கவர்னர் இல.கணேசனுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.
‘நகரேஷு காஞ்சி’ புத்தகத்தை, நாகாலாந்து கவர்னர் இல.கணேசன் வெளியிட, ‘தினமலர்’ நாளிதழ் இணை இயக்குநர் ஆர்.லட்சுமிபதி பெற்றுக் கொண்டார். கார்த்திக், சிவராஜ், ஜான் ரவி, ராமன், டாக்டர் சிவமோகன் ஆகியோருக்கு, சிறந்த சமூக சேவை விருதுகளை, கவர்னர் வழங்கி கவுரவித்தார்.
‘தினமலர்’ இணை இயக்குநர் ஆர்.லட்சுமிபதி பேசியதாவது:
தற்போதைய சூழலில், பத்திரிகையாளராக வருவதற்கு நிறைய சவால்கள் உள்ளன. கடந்த 10 ஆண்டுகளாக, சமூக வலைதளங்கள் பெரிய சவாலாக இருந்து வருகின்றன. மொபைல் போன், கேமரா இருந்தால் யார் வேண்டுமானாலும், ‘ஜர்னலிஸ்ட்’ ஆக மாறி விடலாம்.
ஒரு செய்தியை எந்த அணுகுமுறையில் தருகிறோம் என்பது முக்கியம். செய்தியை கொடுக்கும் முன், அந்த செய்தி தேச நலனுடன், சமூக வளர்ச்சியுடன் இருக்கிறதா என்பதை சிந்தித்து கொடுக்க வேண்டும். அப்படி இருந்தால், அதற்கு மக்கள் அங்கீகாரம் வழங்குவர்.
இவ்வாறு அவர் பேசினார்.
தினமலர் நாளிதழுக்கு வாழ்த்து
கவர்னர் இல.கணேசன் பேசியதாவது:
கடந்த காலங்களில், பாமரர்கள் படிக்கும் பத்திரிகை, பண்டிதர்கள் படிக்கும் பத்திரிகை என்று இருந்தது. ஆனால், அனைவரும் படிக்கும் பத்திரிகையாக, ‘தினமலர்’ இன்றும் இருந்து வருகிறது. பொதுவாக, ஒருவர் லஞ்சம் வாங்கினால், அது செய்தியாக வருகிறது. அதுபோல, லஞ்சம் வாங்காததும் செய்தியாக வர வேண்டும்.
எந்தவொரு காரணத்திற்காகவும், தேசத்தைப் பற்றி தரக்குறைவாக எழுத மாட்டேன் என்ற எண்ணம் பத்திரிகையாளருக்கு இருக்க வேண்டும். புகழ் அடைந்தவருக்கு தருவது அல்ல பத்ம விருது; புகழ் பெற வேண்டியவருக்கு தருவதே பத்ம விருது. நல்ல செயல்கள் செய்வோரை புகழ் பெற செய்ய வேண்டும்.