நாட்டின் முதல் ‘3டி பிரின்டட்’ மாளிகை கோத்ரெஜ் பிராப்பர்டீஸ் அறிமுகம் சென்னை ஐ.ஐ.டி., ஸ்டார்ட் அப் கட்டமைப்பு

மும்பை,இந்தியாவின் முதல், ‘3டி பிரின்டட்’ மாளிகையை, கோத்ரெஜ் பிராப்பர்டீஸ் நிறுவனம், புனேவில் உள்ள அதன், ‘ஈடன் எஸ்டேட்’டில் அறிமுகம் செய்துள்ளது

சென்னை ஐ.ஐ.டி.,யின் முன்னாள் மாணவர்களால், கடந்த 2016ம் ஆண்டு துவங்கப்பட்ட, ‘த்வஸ்தா இன்ஜினியரிங்’ ஸ்டார்ட் அப் நிறுவனம் தான், இதை கட்டமைத்துள்ளது. இதற்கான பணிகள் வெறும் நான்கு மாதங்களில் முடிக்கப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பு.

இதுகுறித்து, கோத்ரெஜ் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை:

இந்த வீடு, கணினியால் உருவாக்கப்பட்ட வடிவமைப்புகளைப் பயன்படுத்தி, ஒவ்வொரு அடுக்காக கட்டப்பட்டு உள்ளது. கட்டுமான நேரம், பொருள் கழிவுகள் மற்றும் பணியாளர் செலவுகள் ஆகியவற்றை கணிசமாக குறைத்துள்ளது.

அதிநவீன ரோபாட்டிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷன் தொழில்நுட்பம், கட்டுமான முறைகளை எவ்வாறு மாற்றியமைக்க முடியும் என்பதை உணர்த்துவதாக இது உள்ளது.

மொத்தம், 2,200 சதுர அடி பரப்பளவில், சிறப்பு கான்கிரீட்’3டி’ பிரின்டரைப் பயன்படுத்தி அமைக்கப்பட்டுள்ள இந்த வீடு, பாரம்பரிய கட்டுமான முறைகளில் ஒரு புரட்சியை ஏற்படுத்தி உள்ளது.

பல்வேறு தொழில்களில் இருந்து மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்கள் பயன்படுத்தப்படுவதால், சுற்றுச்சூழல் பாதிப்பு பெருமளவு குறைக்கப்படுகிறது. காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவது ஒரு சவாலாக இருந்து வரும் சூழலில், இந்த நிலையான அணுகுமுறை முக்கியத்துவம் பெறுகிறது.

இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *