நிலம் வாங்கி தருவதாக ₹1.76 லட்சம் மோசடி மாநகராட்சி பெண் ஊழியர் மீது வழக்கு
சென்னை, பிப்.22: புழுதிவாக்கத்தை சேர்ந்தவர் சாந்தி (45). இவர் சென்னை மாநகராட்சியில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்று அளித்தார். அதில், சென்னை மாநகராட்சி 10வது மண்டல அலுவலகத்தில் பூங்கா ஊழியராக, மேற்கு மாம்பலம் திருவீதி அம்மன் கோயில் தெருவை சேர்ந்த சித்ரா (47) என்பவர் தன்னுடன் பணியாற்றி வருகிறார். இவர், குன்றத்தூர் அடுத்த கோவூர் பகுதியில் எனக்கு நிலம் வாங்கி தருவதாக கூறினார். இதற்காக நான் ₹1.76 லட்சத்தை கடந்த 2023ம் ஆண்டு கொடுத்தேன்.
ஆனால் சொன்னப்படி சித்ரா நிலம் வாங்கி தரவில்லை. இதனால் நான் கொடுத்த பணத்தை திரும்ப கேட்ட போது, அவர் தர மறுத்துவிட்டார். எனவே அவரிடம் இருந்து பணத்தை பெற்று தர வேண்டும், என்று கூறி இருந்தார். அந்த புகாரின் படி விசாரணை நடத்த உயர் அதிகாரிகள் குமரன் நகர் போலீசாருக்கு உத்தரவிட்டனர். அதன்படி போலீசார் இருதரப்பினரையும் அழைத்து பேசினர். அப்போது, சித்ரா கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பணத்தை திரும்பி தருவதாக கடிதம் மூலம் உறுதி அளித்துள்ளார். ஆனால் சொன்னப்படி பணத்தை திரும்ப கொடுக்கவில்லை. இதையடுத்து, போலீசார் மாநகராட்சி ஊழியர் சித்ரா மீது பண மோடி மற்றும் நம்பிக்கை மோசடி ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.