ரூ.1.30 கோடி வீட்டை வாங்கி பண ம் தராத தம்பதி கைது
ஆவடி, பாடி, பாண்டுரங்கபுரத்தைச் சேர்ந்தவர் விஜயா, 53. இவரது வீட்டை வாங்க, 1.30 கோடி ரூபாய்க்கு, செங்குன்றம், ராஜா தெருவைச் சேர்ந்த கந்தன், அவரது மனைவி விலை பேசியுள்ளனர்.
வங்கியில் கடன் பெற்று வீட்டை வாங்கி கொள்வதாகவும், பணம் வந்ததும் விஜயாவின் வங்கி கணக்கில் செலுத்துவதாகவும் கூறியுள்ளனர்.
விஜயாவிற்கு வங்கி கணக்கு இல்லை. இதனால் கந்தன், கொளத்துாரில் உள்ள தனியார் வங்கியில் விஜயாவிற்கு கணக்கு துவங்கி கொடுத்துள்ளார்.
இதையடுத்து கந்தன், ‘எபிஸ்., டி.பி.கந்தன் டிரேடர்ஸ்’ என்ற தன் நிறுவன கணக்கில் இருந்து, 20 லட்சம் ரூபாயை, விஜயாவின் வங்கி கணக்கில் செலுத்தி உள்ளார். மீத தொகையை லோன் வந்ததும் தருவதாக கூறியுள்ளார்.
சில நாட்கள் கழித்து, வீட்டிற்கு விலை பேசிய 1.30 கோடி ரூபாயை, விஜயாவின் கணக்கில் செலுத்தி விட்டதாக விஜயாவை நம்பவைத்து, கந்தன், அவரது மனைவி ஏமாற்றி வந்துள்ளனர்.
இதையறியாத விஜயா, 2021ல், தன் வீட்டை அம்பத்துார் சார் – பதிவாளர் அலுவலகத்தில், கந்தன் பெயருக்கு மாற்றி கொடுத்துள்ளார்.
பின், பணம் வராதது குறித்து அறிந்த விஜயா, தான் ஏமாற்றப்பட்டது குறித்து, கடந்தாண்டு செப்., 11ம் தேதி, ஆவடி மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்தார்.
வழக்கை விசாரித்த ஆய்வாளர் ஜெயலட்சுமி தலைமையிலான தனிப்படை போலீசார், தலைமறைவாக இருந்த செங்குன்றம், ராஜாஜி தெருவைச் சேர்ந்த கந்தன், 47, மற்றும் அவரது மனைவி ஆகியோரை கைது செய்து, நேற்று முன்தினம் சிறையில் அடைத்தனர்.