கஞ்சா விற்றால் புகைப்படம் எடுத்து அனுப்புங்கள்: புகார்தாரர்களை ‘ வேவு’ பார்க்க சொல்லும் கீழ்ப்பாக்கம் போலீசார்

கீழ்ப்பாக்கம்: கீழ்ப்பாக்கம் காவல் மாவட்டத்தில், கஞ்சா, போதை பொருட்கள் புழக்கம் அதிகரித்துள்ளதால், குடியிருப்புவாசிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. இது சம்பந்தமாக புகார் அளித்தால், ‘கஞ்சா விற்போரை புகைப்படம் எடுத்து அனுப்புங்கள்’ என சொல்லவிட்டு, போலீசார் அலட்சியமாக நடந்து கொள்கின்றனர்.

சென்னையில், இளைஞர்கள் மத்தியில் கஞ்சா, மெத் ஆம்பெட்டமைன், வலி நிவாரண மாத்திரைகள் உள்ளிட்ட போதை பொருட்கள் புழக்கம் அதிகரித்துள்ளதால், குற்றங்கள் அதிகரித்து வருகின்றன.

அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டும், போலீசாரின் அலட்சியத்தால், சில பகுதிகளில், இரவில் மட்டுமின்றி, பட்டப்பகலிலும் போதை வஸ்துக்கள் புழக்கத்தில் உள்ளன.

சென்னையில் உள்ள 12 காவல் மாவட்டங்களில், கீழ்ப்பாக்கம் மாவட்டத்தில், எப்போதும் இல்லாத அளவில் போதைப்பொருள் எளிதாக கிடைப்பதாக, குடியிருப்புவாசிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதுகுறித்து, கீழ்ப்பாக்கம், சேத்துப்பட்டு சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: கீழ்ப்பாக்கம் காவல் மாவட்டத்தில், கீழ்ப்பாக்கம், சேத்துப்பட்டு பகுதிகளில், அதிகளவில் போதை வஸ்துக்கள் புழக்கம் உள்ளன.

குறிப்பாக, கீழ்ப்பாக்கம் எல்லையான சாஸ்திரி நகர் அருகில் நேரு பார்க், புதிய பூபதி நகர், சேத்துப்பட்டு ரயில் நிலைய தடுப்புச்சுவர் மற்றும் புல்லாபுரம், கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனையகமாக மாறியுள்ளன.

அதேபோல், சேத்துப்பட்டு எல்லையில், அம்பேத்கர் கால்பந்து திடல் மற்றும் அதன் அருகில் உள்ள சமூக நலக்கூடம் பின்புறம், எம்.எஸ்., நகர் ஆகிய இடங்களிலும், போதை வஸ்துக்கள் விற்கப்படுகின்றன.

இங்கு, பட்டப்பகலில் பைக்களில் வைத்து, போதை பொருட்கள் விற்கப்படுகின்றன. கீழ்ப்பாக்கம் எல்லையில் கண்துடைப்புக்கு போலீஸ் ரோந்து பணிகள் நடக்கின்றன.

அதேபோல், கணக்கிற்காக, ‘புட்டப்’ வழக்கில் பழைய குற்றவாளிகளை கைது செய்து ஜாமினில் விடுகின்றனர். அவர்களை பார்த்து புதிதாக உருவாகியுள்ள இளைய குற்றவாளிகளை, எளிதில் அடையாளம் காண முடியாததால், அவர்கள் சுதந்திரமாக திரிகின்றனர்.

குறிப்பாக, கீழ்ப்பாக்கம் பகுதியில் போதை பொருட்கள் விற்பனை குறித்து போலீசுக்கு தகவல் கொடுத்தால், மொபைலில் படம் எடுத்து அனுப்பும்படி கூறி, அலட்சியமாக செயல்படுகின்றனர். சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் இதை தடுக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *