சென்ட்ரல் வணிக வளாக வடிவமைப்பை மாற்ற மெட்ரோ ரயில் நிறுவனம் முடிவு
சென்னை, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில், சென்னையில் பல்வேறு இடங்களில் அடுக்குமாடி கட்டடங்கள் கட்டப்படுகின்றன. இந்த வகையில் சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரில், 364 கோடி ரூபாயில், 27 மாடி வணிக வளாக கட்டடம் கட்ட திட்டமிடப்பட்டது.
இத்திட்டத்துக்கு, முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் அடிக்கல் நாட்டினார். புதிய கட்டடம் தொடர்பாக, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில், மாதிரி வரைபடம் வெளியானது.
இதில் காணப்படும் வடிவமைப்பு, கட்டுமான துறை சார்ந்தவர்கள் மற்றும் பொதுமக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது.
‘ஏதோ கண்ணாடி மாளிகை போல உள்ளது. கலையம்சம் ஏதுமில்லை; மக்களை கவரும் வகையில் வடிவமைப்பு மாற்ற வேண்டும்’ என, கட்டுமான வல்லுனர்களும் வலியுறுத்தினர்.
இது தொடர்பாக, சமூக வளைதளத்தில் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் பதிவிட்ட கருத்து:
சென்ட்ரல் வணிக வளாக வடிவமைப்பு மற்றும் கட்டுமான பணிக்காக, ஒப்பந்த நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அந்நிறுவனம், புதிய கட்டடத்துக்கான வடிவமைப்பை தயாரித்து வருகிறது. இரண்டு மாதங்களில் வடிவமைப்பு இறுதி செய்யப்படும்.
தற்போது வெளியாகி உள்ள வரைபடம், அடையாளத்துக்காக மட்டும் ஒப்பந்த ஆவணத்துடன் இணைக்கப்பட்டது. இந்த வரைபடம் இறுதியான வரைபடமாக பயன்படுத்தப்படாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
எனவே, சென்ட்ரல் வணிக வளாகத்தில் வடிவமைப்பு, புதிய கலையம்சத்துடன், மக்களை கவரும் வகையில் அமையும் என, மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.