அரும்பாக்கம் பகுதியில் சோகம் ஸ்டவ் வெடித்து உடல் கருகிய பெண்: கண்டுகொள்ளாமல் வீட்டை விட்டு ஓடிய போதை கணவரிடம் போலீஸ் விசாரணை

அண்ணாநகர்: சென்னை அரும்பாக்கம் அசோக் நகரை சேர்ந்தவர் குணா (41). இவர், தனது கணவருடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். அதே பகுதியில் உள்ள பழமுதிர் சோலையில் கணக்காளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இவரது வீட்டில் சமையல் அறையில் சமைத்துக் கொண்டு இருந்தார். அப்போது இவரது கணவர் பக்கத்து அறையில் இருந்துள்ளார்.
சிறிது நேரத்தில், பம்பு ஸ்டவ் பயங்கர சத்தத்துடன் வெடித்து, குணா சேலையில் தீப்பிடித்தது.

இதனால், அவர் அலறி கூச்சலிட்டார். இதை பார்த்த கணவர், குணாவை காப்பாற்றாமல், வீட்டிலிருந்து வெளியேறி, தலைமறைவானார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது, தீயில் உடல் கருகிய நிலையில் குணா உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.  உடனே, அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் 80 சதவீத தீக்காயம் ஏற்பட்டிருந்தது தெரிந்தது. அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து அரசு மருத்துவமனை சார்பில் அரும்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், விரைந்து வந்த போலீசார் படுகாயமடைந்த குணாவிடம் வாக்குமூலம் பெற்றனர். அப்போது அவர் கூறுகையில், சமையில் அறையில் சமைத்து கொண்டு இருந்தபோது பம்பு ஸ்டவ் வெடித்து, சேலையில் தீப்பிடித்தது. உதவி கேட்டு கூச்சலிட்டும், எனது கணவர் என்னை காப்பாற்றவில்லை, என கூறியுள்ளார்.

அவரை தேடி வந்தனர். இதனிடையே, குணாவின் கணவர் அரும்பாக்கம் காவல் நிலையத்தில் சரணடைந்தார். அவரிடம் நடத்திய விசாரணையில், ‘நான் தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வருவது வழக்கம். இதனை என் மனைவி பலமுறை கண்டித்துள்ளார். அதன்படி, நேற்று முன்தினம் இரவு குடித்துவிட்டு வந்த என்னை வழக்கமாக கடிந்து பேசினார். பின்னர் சமைக்க சென்றபோது, ஸ்டவ் வெடித்து சேலையில் தீப்பிடித்தது.

அவரை காப்பாற்ற முயன்றால், நானும் தீயில் கருகி இறந்து விடுவேனோ என்ற அச்சத்தில் வீட்டை விட்டு சென்றுவிட்டேன்,. போதை தெளிந்ததும், மீண்டும் வீட்டிற்கு சென்று பார்த்தபோது அக்கம் பக்கத்தினர் உன் மனைவி தீயில் கருகி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என தெரிவித்தனர். மேலும், அரும்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து, என்னை தேடி வருவதாக கூறினர். இதனால் காவல் நிலையத்திற்கு நானே வந்தேன், என தெரிவித்துள்ளார். அவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *