மாணவர்களுக்கு அமைச்சர் மதிவேந்தன் அறிவுரை : விருப்பம், தேவையை உணர்ந்து பணத்தை செலவிட வேண்டும்

பெரம்பூர்: ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் எச்.டி.எப்.சி தனியார் வங்கி இணைந்து, நிதி கல்வி அறிவு மூலம் சமூகங்களை மேம்படுத்துதல் என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று பள்ளி மாணவர்கள் எவ்வாறு சேமிக்க வேண்டும், இந்த சேமிப்பு அவர்களுக்கு எவ்வாறு உதவி செய்யும் மற்றும் அவரது பெற்றோர்கள் சேமிப்பதற்கான உத்திகள் என்னென்ன, எவ்வாறு முதலீடுகளை செய்ய வேண்டும், எந்தெந்த வழிகளில் முதலீடுகளை செய்ய வேண்டும், அவ்வாறு முதலீடு செய்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் பேசுகையில், ‘‘சில வருடங்களுக்கு முன்பு வரை சேமிப்பு குறித்த விழிப்புணர்வு ஓரளவுக்கு மாணவர்களுக்கு இருந்தது. ஆனால் தற்போது சேமிப்பு என்பது குறைந்துவிட்டது. நமக்கு விருப்பம், தேவை என் இரு விஷயங்கள் இருக்கும். தேவைக்காக செலவு செய்வது மறுக்க முடியாது. ஆனால் விருப்பத்திற்காக செலவு செய்வது வீண் செலவாக சில நேரங்களில் முடிந்து விடும்.

வங்கிகள் சார்ந்த அடிப்படையான கருத்துக்களை மாணவர்களாகிய உங்களுக்கு வழங்கி உள்ளோம். இதில் சேமிப்பின் முக்கியத்துவம், ஆரோக்கியமான முறையில் எவ்வாறு நிதியை சேமிக்கலாம், நீங்கள் முதலீடு செய்வதாக இருந்தால் அதற்கான திட்டங்கள் என்ன தேவைகள் என்ன அரசு சார்ந்த திட்டங்களில் எவ்வாறு சேமிக்கலாம் போன்ற பல்வேறு விஷயங்கள் உங்களுக்கு நிபுணர்கள் மூலம் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.‌

இந்த வாய்ப்புகளை மாணவர்கள் பயன்படுத்தி சேமிப்பு திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். நம் சம்பாதிக்கும் ஊதியத்தில் 20% சேமிக்கலாம் என நிபுணர்கள் கூறுவார்கள். ஆனால் தற்பொழுது 35 சதவீதத்திலிருந்து 40 சதவீதம் வரை நாம் சம்பாதிக்கும் பணத்தை சேர்த்து வைக்கலாம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இது நமது குடும்பத்திற்கு எதிர்காலத்தில் பயனுள்ளதாக இருக்கும்,’’ என்றார்.

நிகழ்ச்சியில், அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மேயர் பிரியா, திரு.வி.க.நகர் சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி. ஆதிதிராவிடர் நலத்துறை செயலர் லட்சுமி பிரியா, ஆதிதிராவிடர் நலத்துறை ஆணையர் ஆனந்த், ஹெச்டிஎப்சி வங்கி மண்டல தலைவர் பாலாஜி கிருஷ்ணமாச்சாரி, மாமன்ற உறுப்பினர் சரவணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *