மது போதையில் தகராறு அ.தி.மு.க ., நிர்வாகி கைது
அசோக் நகர் 14வது தெருவைச் சேர்ந்தவர் சுந்தரராஜன், 72. இவரது மகன்கள் தீபக், பிரேம்நாத் ஆகியோர், தங்கள் மனைவியருடன், உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டு, கடந்த 12ம் தேதி பைக்கில் வீடு திரும்பினர்.
அசோக் நகர் 13வது தெரு வழியாக வந்தபோது, அங்கு மது போதையில் இருந்த இருவர், அவர்களிடம் அசிங்கமாக பேசியுள்ளனர். இதனால், இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, கைக்கலப்பாக மாறியது. இது குறித்து அசோக் நகர் போலீசார் விசாரித்தனர். இதில், அசோக் நகர் 13வது தெருவைச் சேர்ந்த அ.தி.மு.க., தி.நகர் இளைஞர் மற்றும் பெண்கள் பாசறை செயலர் இளஞ்செழியன், 38, மற்றும் அசோக் நகர், புதுார் 2வது தெருவைச் சேர்ந்த சரத்குமார், 29, ஆகியோரை, நேற்று முன்தினம் கைது செய்தனர்.
இதில், இளஞ்செழியன் மீது, அசோக் நகர் மற்றும் கே.கே.நகர் காவல் நிலையத்தில் 12 குற்ற வழக்குகள் உள்ளன. அதேபோல, சரத்குமார் மீது கே.கே.நகர், விருகம்பாக்கம், அசோக் நகர், கே.கே.நகர் உள்ளிட்ட காவல் நிலையங்களில், நான்கிற்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளதும் தெரிவந்தது.