அனுமதி இல்லாமல் இறக்குமதி செய்த ரூ.6.60 கோடி பட்டாசு , காலணி பறிமுதல்
சென்னை, சென்னை துறைமுகத்திற்கு, சில நாட்களுக்கு முன், துபாயில் இருந்து வந்த கப்பல் மீது சுங்கத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
அதில் இருந்து கன்டெய்னர்களை திறந்து பார்த்தபோது, பட்டாசுகள் மற்றும் வெடி மருந்துகள் இருந்துள்ளன. இவை அதிக சத்தத்துடன் வெடிக்கக்கூடியவை.
இவ்வகையான பொருட்களுக்கு முறையாக அனுமதி பெற்ற பின் தான், இறக்குமதி செய்ய வேண்டும். ஆனால், அனுமதி பெறாமல் கன்டெய்னரில் எடுத்து வந்த 3,672 பட்டாசு பெட்டிகளை, சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு 1.47 கோடி ரூபாய்.
அதேபோல், நேற்று முன்தினம் வந்த கப்பல் ஒன்றில், மூன்று கன்டெய்னர்களில் உணவு பொருட்கள் என குறிப்பிடப்பட்டிருந்தது.
அவற்றை சோதனை செய்தபோது 15,000 மொபைல் போன் பேட்டரிகள், பிரபல நிறுவனம் பெயர் உடைய போலி காலணிகள், இருசக்கர வாகனத்தில் பயன்படுத்தப்படும் 516 ‘அலாய் வீல்கள்’ இருப்பது கண்டுபிடிக்கப்பட்டன. 5.13 கோடி ரூபாய் மதிப்புள்ள இப்போலி பொருட்களை, அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சென்னை சுங்கத்துறை அதிகாரபூர்வமாக வெளியிட்ட அறிக்கையில், கப்பல்கள் எங்கிருந்து வந்தன; இறக்குமதியாளர் யார் போன்ற விபரங்களை வெளியிடவில்லை.
இதுகுறித்து துறைமுக சுங்கத்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்ட போது, அவர்கள் பதிலளிக்க மறுத்துவிட்டனர்.