தியாகராயா கல்லூரி மாணவர்கள் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நடைபயணம்: 7 கி.மீ . தூரம் நடந்தது

தண்டையார்பேட்டை: வண்ணாரப்பேட்டை சர் தியாகராயா கல்லூரியில் தேசிய மாணவர் படை மாணவ, மாணவிகள் சுமார் 100 பேர் கொண்ட அணியினர் வடசென்னையில் 7 கி.மீ. தூரம் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நடைபயணம் சென்றனர். தேசிய மாணவர் படை தலைவர் மோகன்ராஜ் தலைமை வகித்தார். கல்லூரியில் தொடங்கிய பேரணியை கல்லூரி முதல்வர் தியாகராஜன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மக்கள் கூடும் வணிக வளாகங்கள், மார்க்கெட் பகுதிகளில் 7 கிலோ மீட்டர் தூரம் ஊர்வலமாக சென்று துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். போதைப்பொருள் பழக்கம் வேடிக்கையுடன் தொடங்குகிறது, ஆனால் அது உங்கள் எதிர்காலத்தையும், உங்கள் குடும்பத்தையும் அழிக்கிறது மற்றும் அது ‘உங்கள் வாழ்க்கை’ முடிவடைகிறது.

பெற்றோர்கள் பிள்ளைகள் சொல்வதைக் கேளுங்கள் மற்றும் அவர்களுக்கான நேரத்தை ஒதுக்குங்கள், உங்கள் பிள்ளையின் கவலைக்கான காரணத்தை கண்டறிந்து, மருத்துவரிடம் ஆலோசித்து, சிகிச்சை மற்றும் ஆலோசனையின் மூலம் போதைப்பழக்கத்தை முறியடிக்கவும், மாணவர்கள் போதைப்பொருள் பழக்கம் அல்லது கடத்தல் குறித்து உங்கள் பள்ளி, கல்லூரி முதல்வர் அல்லது காவல்துறையிடம் புகார் அளிக்க வேண்டும், பார்ட்டிகளில் பானங்கள் குடிக்கும் போது, ​​மாணவிகள் கவனமாக இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு பிரசுரங்களை கடைகடையாக, வீதிவீதியாக வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சியில் தண்டையார்பேட்டை காவல் ஆய்வாளர்கள் தட்சணாமூர்த்தி, உதவி ஆய்வாளர் மகேந்திரராசு, போக்குவரத்து காவலர் மணிவண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *