திருவொற்றியூர் மெட்ரோ அருகே ரூ.14 கோடியில் புதிய பஸ் நிலையம் ரூ.14 கோடியில் அமைகிறது

சென்னை,’திருவொற்றியூர் மெட்ரோ ரயில் நிலையம் அருகில், 14 கோடி ரூபாயில் புதிய பணிமனை மற்றும் பேருந்து நிலையம் அமைக்கும் பணி விரைவில் துவங்கப்படும்’ என, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திருவொற்றியூர் மெட்ரோ பணியின்போது, மாணிக்கம் நகர் பிரதான சாலையில் செயல்பட்டு வந்த பேருந்து நிலையம் மற்றும் பணிமனை, அஜாக்ஸ் நகருக்கு மாற்றப்பட்டது.

இங்கிருந்து தற்போது பிராட்வே, தாம்பரம், கிளாம்பாக்கம், கோயம்பேடு உட்பட பல்வேறு வழித்தடங்களில் தினமும் 80க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இருப்பினும், போதிய அளவில் அடிப்படை வசதிகள் இல்லை. புறநகர் மற்றும் மெட்ரோ ரயிலுக்கு செல்ல சிரமமாக இருப்பதாக பயணியர் புகார் தெரிவித்தனர்.

இதற்கிடையே, திருவொற்றியூர் மெட்ரோ ரயில் நிர்வாகம், மாநகர பேருந்து நிலையம் என ஒருங்கிணைக்கும் வகையில் புதிய பேருந்து நிலையத்தை கட்டுவதற்கான டெண்டரை வெளியிட்டுள்ளது. இதற்கான, நிறுவனம் தேர்வு செய்யும் பணிகள் நடந்து வருகின்றன.

இது குறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:

மெட்ரோ, மாநகர பேருந்து போன்ற பொது போக்குவரத்து வசதியை மேம்படுத்தவும், பயணியர் வருகை அதிகரிக்க ஒருங்கிணைந்த நிலையமாக மாற்றி வருகிறோம். அதன்படி, திருவொற்றியூர் மெட்ரோ அருகிலேயே, புதிய பேருந்து நிலையம் அமைக்க திட்டமிட்டு, டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது.

தற்போதுள்ள பழைய கட்டடங்கள், ஷெட்டுகள் அகற்றப்பட்டு புதிய கட்டடம் கட்டப்படும். பேருந்து, பணிமனை என தனித்தனியாக இருக்கும்.

பேருந்துகள் உள்ளே வந்து செல்ல போதிய சாலைகள், பயணியருக்கான இருக்கை, கழிப்பறை வசதி, போதிய வாகன நிறுத்த வசதிகளுடன் அமைக்கப்படும். மெட்ரோ ரயில் நிலையத்துக்கு செல்ல அடிப்படை வசதிகளும் உருவாக்கப்படும்.

இதுற்கான ஒப்பந்த நிறுவனம் தேர்வு செய்து பணி ஆணை வழங்கியவுடன், அடுத்த 12 மாதங்களில் அனைத்து பணிகளும் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *