நெரிசலை குறைக்க தாம்பரம் ஜி.எஸ்.டி. , சாலையில் புது முயற்சி துாண்களை அகற்றி 653 அடிக்கு நிழற்குடை
தாம்பரம், தாம்பரம் பேருந்து நிலையத்தில், நிழற்குடைக்குள் பேருந்துகள் செல்வதற்கு இரும்பு துாண்கள் இடையூறாக உள்ளதால், ஜி.எஸ்.டி., சாலையில் நாள்தோறும் நெரிசல் ஏற்படுகிறது.
இதைதடுக்க, பழைய நிழற்குடையை அகற்றி, புதியதாக, 6.55 கோடி ரூபாய் செலவில் துாண்கள் இல்லாத புதிய நிழற்குடை அமைக்கப்பட உள்ளது.
சென்னையின் நுழைவாயிலாக விளங்குகிறது, தாம்பரம். சுற்றுப்புற பகுதிகளில் இருந்து நாள்தோறும், இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்டோர், பல்வேறு பணிகளுக்காக, தாம்பரம் வந்து செல்கின்றனர்.
இவர்களில், 40 சதவீதம் பேர், பேருந்துகளில் வருகின்றனர். இதன் காரணமாக, தாம்பரத்தில் உள்ள மேற்கு- கிழக்கு பேருந்து நிலையங்களில் கூட்டம் அலைமோதுகிறது.
தாம்பரத்தில், குரோம்பேட்டை மார்க்கமான பேருந்து நிலையத்தில், பேருந்துகள் நின்று செல்ல வசதியாக, 363 அடி, 323 அடி நீளம் என, இரண்டு பகுதிகளாக நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது.
பெருங்களத்துாரில் இருந்து வரும் பேருந்துகள், இந்த நிழற்குடைக்குள் நேராக செல்ல முடியவில்லை. சற்று இடதுபுறம் திருப்பி, செல்ல வேண்டியுள்ளது. அப்படி திரும்பும்போது, பின்னால் வரும் பேருந்துகள் ஜி.எஸ்.டி., சாலையிலேயே நிறுத்தப்படுகின்றன.
நாள்தோறும் ‘பீக் அவர்’ நேரத்தில், ஜி.எஸ்.டி., சாலையில் கடும் நெரிசல் ஏற்படுகிறது. நெரிசல் ஏற்படுவதற்கான காரணங்களை போக்குவரத்து போலீசார் ஆராய்ந்த போது, தற்போதுள்ள நிழற்குடையின் இரும்பு துாண்களே காரணம் என்பதை கண்டறிந்தனர்.
மற்றொரு புறம், நிழற்குடை பாதை முழுக்க, வியாபாரிகள் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியுள்ளது. நடைபாதை மற்றும் இருக்கைகள் பிச்சைக்காரர்களின் இருப்பிடமாக மாறிவிட்டது.
இடையூறாக உள்ள இரும்பு துாண்களை அகற்றினால், பேருந்துகள் நேராக செல்லும். ஆக்கிரமிப்புகள் அகற்றி, சீரமைத்தால் ஜி.எஸ்.டி., சாலையில் நெரிசல் குறையும்’ என, தாம்பரம் போலீஸ் கமிஷனர் அபின் தினேஷ் மோதக்கிற்கு, போலீசார் அறிக்கை அளித்தனர்.
இது குறித்து, சி.எம்.டி.,வுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
இதைதொடர்ந்து, தற்போதுள்ள நிழற்குடையை அகற்றி, 6.55 கோடி ரூபாய் செலவில், ஒரு புறத்தில் மட்டுமே துாண்கள் கொண்ட புதிய நிழற்குடை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதன்படி, நடைபாதையோரம் பெரிய துாண்கள் அமைத்து, அதிலிருந்து நிழற்குடை நீட்டிக்கப்படும். இதில் தற்போது உள்ளது போல், வலது புறத்தில் துாண்கள் வராது.
இதனால், பேருந்துகள் நேராக உள்ளே வந்து நின்று, பயணியரை இறக்கி, ஏற்றி செல்ல முடியும். மேலும், இப்பணியின் போது ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவதோடு, பிச்சைக்காரர்களின் தொல்லையும் கட்டுப்படுத்தப்படும்.
வலதுபுற நடைபாதையில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, அங்கு நேர காப்பாளர் அறை, பயணியருக்கான இருக்கை, பேருந்துகளின் நிலவரம் குறித்த கணிணி பலகை உள்ளிட்ட வசதிகள் அமையவுள்ளன.
இந்த இடத்தை செங்கல்பட்டு கலெக்டர் அருண்ராஜ், நேற்று நேரில் ஆய்வு செய்து, நிழற்குடை அமையும் விதம் குறித்து கேட்டறிந்தார்.
திட்ட விவரம்
திட்ட மதிப்பீடு 6.55 கோடிமாநில அரசு பங்கு 2 கோடிமாநகராட்சி பங்கு 4.55 கோடிநிழற்குடை நீளம் 653 அடிநிழற்குடை அகலம் 28 அடிடெண்டர் கோரப்படவுள்ள தேதி மார்ச், 7பணி முடிக்க வேண்டிய காலம் 4 மாதம்