டாக்டர்கள் வராத மாநகராட்சி மருத்துவமனைகள் கொந்தளிப்பு! சின்ன போரூரில் நோயாளிகள் போராட்டம்
சென்னை :சென்னை மாநகராட்சியில், 138 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், 16 நகர்ப்புற சமுதாய மையங்கள், 24 மணி நேரமும் செயல்படும் மூன்று மகப்பேறு மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன.
காய்ச்சல் முதல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. கர்ப்பிணியருக்கும் பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆண்டுக்கு இரண்டு கோடி பேர் வரை, மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சை பெறுகின்றனர்.
மாநகராட்சி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில், 50க்கும் மேற்பட்ட டாக்டர் பணியிடங்கள் காலியாக உள்ளன. ஒப்பந்த அடிப்படையில் தேர்வானவர்களும், பணியில் சேர முன்வரவில்லை. இதனால், இரவு நேரங்களில் அவசர சிகிச்சை அளிக்க டாக்டர் இல்லாததால், நோயாளிகள் அவதிப்படும் நிலை நீடிக்கிறது.
அந்த வகையில், கண்ணகி நகரைச் சேர்ந்த கர்ப்பிணியான தீபிகா, அப்பகுதியில் உள்ள மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில், கடந்த 7ம் தேதி இரவு அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் பணியில் இல்லாததால், செவிலியர்கள் முதலுதவி அளித்ததில், தீபிகாவுக்கு ரத்தப்போக்கு அதிகமானது.
அங்கிருந்து, திருவல்லிக்கேணி கஸ்துாரிபா காந்தி அரசு மகப்பேறு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், அறுவை சிகிச்சையில் ஆண் குழந்தை இறந்து பிறந்தது.
கண்ணகி நகர் மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளித்திருந்தால், குழந்தை உயிருடன் இருந்திருக்கும் எனக்கூறி, அம்மருத்துவமனையை முற்றுகையிட்டு, உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வளசரவாக்கம் மண்டலம், 151வது வார்டு, சின்ன போரூரில், நகர்ப்புற சமுதாய நல மருத்துவமனை உள்ளது. இங்கு, மகப்பேறு, நம்பிக்கை மையம், தீவிர சிகிச்சை உட்பட பல்வேறு பிரிவுகள் உள்ளன. பிரசவம் மற்றும் பரிசோதனைக்காக தினமும், 50 பேர் உட்பட, பல்வேறு சிகிச்சைகளுக்காக, 300க்கும் மேற்பட்டோர் வருகின்றனர்.
இந்த மருத்துவமனையில், நேற்று காலை 7:00 மணியில் இருந்து, 11:00 மணி வரையிலும், நோயாளிகள் காத்திருந்த நிலையில், டாக்டர்கள் யாரும் பணிக்கு வரவில்லை. அவர்களுடன் சினிமா சிரிப்பு நடிகர் கஞ்சா கருப்பு சிகிச்சை பெற வந்தார். டாக்டர்கள் இல்லாத நிலையில் பொறுமையிழந்து நோயாளிகள் காத்திருந்தனர்.
ஒரு கட்டத்தில் , கோபமடைந்த கஞ்சா கருப்பு மற்றும் நோயாளிகள், மருத்துவமனை ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, சிகிச்சைக்கு அழைத்து வரப்பட்டிருந்த மூதாட்டி, உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தார். இதையடுத்து அந்த மூதாட்டி, 108 ஆம்புலன்ஸ் வாயிலாக, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அதேபோல், வளசரவாக்கம் 145வது வார்டு சக்தி நகர், 148வது வார்டு மேட்டுக்குப்பம் பிரதான சாலை, 155வது வார்டு பஜனை கோவில் தெரு பகுதிகளில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில், டாக்டர்கள் இல்லை என, பொதுமக்கள் முதல் கவுன்சிலர்கள் வரை புகார் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்தும், நம் நாளிதழில் தொடர்ந்து செய்திகள் வெளியாயின. ஆனாலும், டாக்டர்கள் பணியிடங்களை மாநகராட்சி நிரப்பவில்லை.
இதனால், மருத்துவ சேவை பாதிக்கப்படுவதோடு, நோயாளிகள், பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுவதும், ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபடும் நிலையும் தொடர்கிறது.
கால் வலிக்காக மருத்துவமனை வந்தேன். வெகுநேரம் காத்திருந்தும் டாக்டர்கள் வரவில்லை. அரசு டாக்டர்கள், தனி கிளினிக் நடத்துகின்றனர். இங்கு, நாய் கடித்து ஒருவர், மண்டை உடைந்து ஒருவர், உயிருக்கு ஆபத்தான நிலையில் மூதாட்டி என, பலர் காத்திருக்கின்றனர்.
— கஞ்சா கருப்பு,
நடிகர்.