முதியவரை பின் தொடர்ந்து ரூ.2 லட்சம் பறித்தோர் கைது.
வில்லிவாக்கம்,வில்லிவாக்கம், தாதங்குப்பத்தைச் சேர்ந்தவர் கேசவன், 75. இவர், 3ம் தேதி, தாதங்குப்பம் மாடவீதியில் உள்ள தனியார் வங்கியில், தன் கணக்கில் இருந்த, 2 லட்சம் ரூபாயை எடுத்து, கைப்பையில் வைத்து வெளியில் வந்தார்.
பின், அதே சாலையில் காய்கறி வாங்குவதற்காக, பணப்பையை இருசக்கர வாகனத்தில் வைத்துவிட்டு, கடைக்காரரிடம் விலையை கேட்டுக் கொண்டிருந்தார்.
திடீரென திரும்பி பார்த்தபோது, பணப்பை திருடு போனது தெரிய வந்தது. இதுகுறித்து, வில்லிவாக்கம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
விசாரணையில், வில்லிவாக்கத்தைச் சேர்ந்த ஸ்டீபன், 34, கிஷோர்குமார், 26, ஆகியோர் சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. வங்கிக்கு சென்ற முதியவரை நோட்டமிட்டபடி பின்தொடர்ந்து சென்ற இருவரும், கண்ணிமைக்கும் நேரத்தில் பணத்தை திருடிச் சென்றது தெரியவந்தது.
அவர்களை கைது செய்த போலீசார், 60,000 ரூபாய், வங்கி பாஸ்புக், மொபைல் போன் மற்றும் அவர்களது இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து, நேற்று சிறையில் அடைத்தனர்.