ஆன்லைன் மூலம் தனியார் கம்பெனி வங்கி கணக்கில் ரூ.1 கோடி நூதன திருட்டு; கொல்கத்தாவை சேர்ந்த 2 பேர் கைது

சென்னை

ரூ.1 கோடி ேமாசடி

சென்னை அம்பத்தூரை அடுத்த பட்டரவாக்கம் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் கம்பெனியின் வங்கி கணக்கில் இருந்து, சுமார் 25 நிமிடத்தில் 6 தவணையாக ரூ.1 கோடியே 10 லட்சம் திடீரென மாயமானது. ஆன்லைன் மூலம் மர்மநபர்களால் நூதன முறையில் வங்கி கணக்கில் இருந்த பணம் திருடப்பட்டு இருப்பது தெரிந்தது.

இது குறித்து கம்பெனி மேலாளர் சுரேஷ் அளித்த புகாரின்பேரில் அம்பத்தூர் எஸ்டேட் போலீசார் 3 தனிப்படை அமைத்து, சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் விசாரணை நடத்தினர்.

கொல்கத்தாவை சேர்ந்தவர்கள்

அதில் ஆன்லைன் மூலம் தனியார் நிறுவனத்தின் பணத்தை நூதன முறையில் திருடியது கொல்கத்தாவைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் கொல்கத்தா சென்றனர். 10 நாட்கள் விசாரணைக்கு பிறகு சம்பவம் தொடர்பாக சபீர் அலி (வயது 28) மற்றும் கிருஷ்ணகுமார் பிரசாத் (31) ஆகிய 2 பேரை கைது செய்து சென்னை அழைத்து வந்தனர்.

அவர்களிடம் இருந்து ரூ 35 லட்சத்தை பறிமுதல் செய்த போலீசார், அவர்களின் வங்கி கணக்கில் இருந்த ரூ.28 லட்சத்தை முடக்கினர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த அம்பத்தூர் எஸ்டேட் போலீசார், கைதான 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

வெளிநாட்டு நபர்கள்

மேலும் இன்ஸ்பெக்டர் ராமசாமி தலைமையிலான 5 பேர் கொண்ட தனிப்படை போலீசார் கொல்கத்தாவில் தொடர்ந்து முகாமிட்டு இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை தேடி வருகின்றனர்.

இந்த ஆன்லைன் கொள்ளை கும்பலின் பின்புலத்தில் வெளிநாட்டை சேர்ந்த நூற்றுக்கணக்கான மோசடி நபர்கள் இருப்பதாகவும், அவர்களை முழுமையாக பிடிப்பது சிரமமான காரியம் என்பதால், பொதுமக்கள் தங்கள் வங்கி கணக்குகளை பத்திரமாகவும், பாதுகாப்புடனும் பராமரிக்க வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *