ஒரே ஊராட்சியில் பல ஆண்டுகளாக பணிபுரியும் ஊராட்சி செயலர்களை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்: அனைத்து கலெக்டர்களுக்கும் உத்தரவு
சென்னை: ஒரே ஊராட்சியில் தொடர்ந்து பல ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் ஊராட்சி செயலர்களை பணியிட மாறுதல் செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து, ஊரக வளர்ச்சித்துறை இயக்குநர் பொன்னையா பிறப்பித்துள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க கோரிக்கை மனுவை பரிசீலனை செய்ததில், கிராம ஊராட்சி செயலாளர்களுக்கு, வட்டார அளவில் கலந்தாய்வு மூலம் பணியிட மாறுதல் வழங்கப்பட வேண்டியுள்ளது.
அதன்படி, ஊராட்சி செயலாளர்கள் ஒரே கிராம ஊராட்சியில் தொடர்ந்து பல ஆண்டுகளாக பணிபுரிந்து வருவதை மாற்றியமைக்க வேண்டும், ஊராட்சி செயலாளர் முதுநிலை மற்றும் நிர்வாக அனுபவத்திற்கு ஏற்ப கிராம ஊராட்சிகளில் பணியமர்த்த வேண்டும், வயது மற்றும் உடல்நலம் சார்ந்த அடிப்படையில் கிராம ஊராட்சிகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும், கள அளவில் மாறுபட்டுள்ள வெவ்வேறு ஊராட்சிகளில் பணியாற்றும் வாய்ப்பு பெறுவதால் ஊராட்சி செயலாளர்களின் திறன் மேம்பாடு அடைய வேண்டும், கிராம ஊராட்சியில் உள்ள பணிகளுக்கு ஏற்ப தகுதியான ஊராட்சி செயலாளர்களை பணியமர்த்த வேண்டும், நிர்வாக நலன் மற்றும் கலந்தாய்வு அடிப்படையில் ஊராட்சி செயலாளர்களுக்கு பணியிட மாறுதல் வழங்க வேண்டும். மேலும், கிராம ஊராட்சிகளில் உள்ள பணிகளை ஊராட்சி செயலாளர்கள் மூலமாக சிறந்த முறையில் செயல்படுத்திடும் பொருட்டு, நிர்வாக நலன் அடிப்படையில் கலந்தாய்வு நடத்தி வட்டாரத்திற்குள் பணியிட மாறுதல்களை வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.