தலைநகரான டெல்லியில் ஆம் ஆத்மி தலை குனிகிறது பாஜ தலை நிமிர்கிறது: தமிழிசை பேட்டி

 சென்னை: டெல்லி சட்டசபை தேர்தலில் பாஜ வெற்றி பெற்றதையொட்டி சென்னை தி.நகரில் உள்ள பாஜ தலைமை அலுவலகத்தில் வெற்றி கொண்டாட்டம் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்த கொண்டாட்டத்தில் பாஜ மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பாஜ தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாநில செயலாளர் எஸ்.சதீஷ்குமார், துணை தலைவர் கருநாகராஜன் உள்ளிட்ட பாஜ நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து தமிழிசை சவுந்தரராஜன் அளித்த பேட்டி:

டெல்லியில் ஆம் ஆத்மி தலை குனிகிறது. காங்கிரஸ் நிலை குலைகிறது. பாஜ வளர்ச்சிக்கான திட்டங்களை முன்னெடுத்துச் செல்லும் என்பதற்காக தலைநகரில் மக்கள் பாஜவுக்கு வாக்களித்திருக்கிறார்கள். டெல்லியில் எந்த இடத்திலும் கெஜ்ரிவால் வளர்ச்சியை தரவில்லை. மின்சாரம், தண்ணீர் வசதி போன்ற எதையும் முறைப்படுத்தவில்லை. மக்கள் கண்ணீரில் தான் தத்தளித்தார்கள். டெல்லி மக்கள் உறுதியான முடிவை தந்திருக்கிறார்கள்.

கெஜ்ரிவால் நிலை குலைந்து போயிருக்கிறார். அவர்களின் இந்தியா கூட்டணி தேர்தலை கூட முறையாக எதிர் கொள்ளவில்லை என்றும், காங்கிரஸோ ஜீரோ. பாஜ வெற்றி பெற்றிருக்கிறது. பட்டியலின மக்களுக்கு எதிரானவர்கள் என்று பாஜவை சித்தரித்த போதும் அங்கெல்லாம் பாஜ வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியை நாங்கள் கொண்டாடுகிறோம்.

பாஜவின் வெற்றி அதிர்ச்சி அல்ல. காங்கிரஸின் தோல்வி தான் அதிர்ச்சி. திருமாவளவனுக்கு சொல்கிறேன். இன்னும் உங்களை பலப்படுத்திக் கொள்ளுங்கள். இன்னும் நீங்கள் நிறைய அதிர்ச்சிகளை தாங்க வேண்டும். டெல்லியில் வாக்குகளை பெற பிரதமரின் திட்டங்களும் தலைவர்களின் செயல்பாடுகளும் காரணம். பிரதமரின் ஆட்சியும் நல்ல திட்டங்களும் எங்களுக்கு ஆதரவாக இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *