2.50 கோடி கிலோ கட்டட கழிவு ஒரு மாதத்தில் அகற்றம்
சென்னை,சென்னையில் ஜன., 7 முதல் பிப்., 6 வரை மேற்கொள்ளப்பட்ட துாய்மை பணியில், 2.50 கோடி கிலோ கட்டட கழிவுகளை, மாநகராட்சி அகற்றியுள்ளது.
இதுகுறித்து, சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை:
சென்னை மண்டல வாரியாக சாலைகள், தெருக்களில் உள்ள கட்டட கழிவு அகற்றும் பணி, ஜன., 7ல் துவங்கியது. இப்பணிகளுக்காக, 101 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன.\
இதில், பிப்., 6 வரை, 2.50 கோடி கிலோ குப்பை கழிவு அகற்றப்பட்டது. இவை, பெருங்குடி, கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டன.
மாநகராட்சி சார்பில், தினமும் 10 லட்சம் கிலோ கட்டட கழிவு அகற்றப்படுகின்றன. இதில், 1,000 கிலோ வரையில் கழிவு எவ்வித கட்டணமின்றி அகற்றப்படும். அதற்கு மேல், உரியவர்களிடம் கட்டணம் வசூலிக்கப்பட்டு அகற்றப்படுகிறது.
பொது இடங்கள், நீர்நிலைகளில் சட்ட விரோதமாக குப்பை, கட்டட கழிவு கொட்டுவோருக்கு 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. அதன்படி ஜனவரியில், 8.06 லட்சம் ரூபாய் வசூலிக்கப்பட்டு உள்ளது. தங்கள் வீடு மற்றும் சுற்றுப்புறங்களில் உள்ள குப்பை மற்றும் கட்டட கழிவு குறித்து, ‘1913’ என்ற எண்ணில் தெரிவிக்கலாம். பணியாளர்கள் குப்பையை அகற்றுவர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.