சென்னையில் ரூ.100 கோடியில் அமைகிறது யோகதா ஆசிரமம்
சென்னை: ஒய்.எஸ்.எஸ்., எனப்படும், யோகதா சத்சங்க சொசைட்டி ஆப் இந்தியா சார்பில், சென்னை அருகே நடத்தி வரும், ‘யோ
கதா சத்சங்க சபா ஆசிரமம்’ விரிவாக்கப் பணிகள், 100 கோடி ரூபாய் செலவில் நடைபெற உள்ளன.
இதுகுறித்து, யோகதாவின் மூத்த சன்னியாசியும், ஒய்.எஸ்.எஸ்., இயக்குநர் குழு உறுப்பினருமான சுவாமி பவித்ரானந்த கிரி கூறியதாவது: யோகதா சத்சங்க சபா ஆசிரமம், ஸ்ரீபெரும்புதுார் அருகே மண்ணுார் கிராமத்தில் பசுமையான இயற்கை எழில் கொஞ்சும் பகுதியில், 17 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.
உலகெங்கிலும் ஆன்மிகத்தை தேடும் பக்தர்களுக்கு, பரமஹம்ஸ யோகானந்தரின் விஞ்ஞானப்பூர்வ கிரியா யோக தியான உத்திகளையும், அவரின் போதனைகளையும் வழங்கி, யோகதா சத்சங்க சபா, 100 ஆண்டுகளாக சேவையாற்றி வருகிறது.
சென்னையை மையமாகக் கொண்டு தென்னிந்திய பக்தர்களுக்கு கிரியா யோகா தியானங்கள், ஆன்மிக பயிற்சிகள் வழங்க, இந்த ஆசிரமம் உதவியாக இருக்கிறது. இங்கு, 100 கோடி ரூபாய் செலவில் சன்னியாசிகள், பக்தர்கள் தங்கி, தியான பயிற்சி செய்ய புதிய கட்டடங்கள் கட்டும் பணி நடைபெற உள்ளது.
இந்த ஆசிரமத்தில் வசிக்கும் சன்னியாசிகள், பக்தர்களுக்கு ஆலோசனைகளும் வழங்குகின்றனர். ஆசிரமத்துக்கு அருகே இருக்கும் கிராம மக்களுக்கு மருத்துவ முகாம்கள், கல்வி உதவி உட்பட யோகதா சத்சங்க சபா ஆசிரமத்தின் தொண்டு பணிகள் நடந்து வருகின்றன.
அமைதி மற்றும் தியானத்தை விரும்புவோர் இந்த ஆசிரமத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். தகவல்களுக்கு, 75500 12444, 65166 55599 ஆகிய எண்களுக்கும், chennaiashram@yssi.org என்ற இ — மெயில் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.