உயிர்களை காவு வாங்க காத்திருக்கும் வடபழனி மேம்பால சர்வீஸ் சாலை அல்லாடும் ஆம்புலன்ஸ்கள்
வடபழனி, வடபழனி 100 அடி சாலை வழியாக, புழல் ஏரி குடிநீர் குழாயும், கீழ்ப்பாக்கத்தில் இருந்து கே.கே.நகருக்கு குடிநீர் குழாயும் செல்கிறது. கோயம்பேடு அருகே கீழ்ப்பாக்கத்தில் இருந்து வரும் குழாயில், புழல் குடிநீர் குழாய் இணைக்கப்பட்டு, வடபழனி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு வினியோகம் செய்யப்படுகிறது.
‘க்ரூட்டிங்’ முறை
இந்நிலையில், 2016ம் ஆண்டு, வடபழனி ஆற்காடு சாலை – 100 அடி சாலை சந்திப்பில் ஏற்பட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், வடபழனி தெற்கு சிவன் கோவில் தெரு துவங்கி, வடபழனி வடக்கு மாடவீதி அருகே, 520 மீட்டர் துாரத்திற்கு மேம்பாலம் கட்டப்பட்டது.
ஆனால், குடிநீர் குழாய்கள் மாற்றி அமைக்கப்படவில்லை. இதனால், மேம்பாலத்தின் சாய்தளத்தில் குடிநீர் குழாய்கள் சிக்கி கொண்டன. கடந்தாண்டு நவம்பரில் இந்த குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால், சாலையில் தண்ணீர் பாய்ந்தோடி தேங்கியது.
நாளடைவில் மேம்பாலத்தின் சாய்தள உள்பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டது. அதேபோல சாலையும் சேதம் அடைந்தது.
இதையடுத்து, மேம்பாலத்தின் சாய் தளத்தை வலுப்படுத்த, ‘க்ரூட்டிங்’ முறையில் எம்.சாண்ட், சிமென்ட் கலவையை, மேம்பால சாய் தள தடுப்பு சுவர் இடைவெளி வழியாக செலுத்தி சீரமைக்கப்பட்டது.
இதையடுத்து, குடிநீர் வாரியம் சார்பில், வடபழனி சிம்ஸ் மருத்துவமனை அருகே, பதிய வால்வு அமைக்கப்பட்டது.
இதன் வாயிலாக மேம்பாலத்தின் கீழ் செல்லும் குழாய், ‘டம்மி’ செய்யப்பட்டது. மேலும், 300 மீட்டர் துாரத்திற்கு குடிநீர் குழாயை மாற்றி அமைக்கும் பணியில், குடிநீர் வாரியம் ஈடுபட்டு வருகிறது.
கடும் அவதி
இதனால், வடபழனியில் இருந்து அரும்பாக்கம் நோக்கி செல்லும் வடபழனி அணுகு சாலையில் மரண பள்ளங்கள் ஏற்பட்டு, போக்குவரத்திற்கு லாயக்கற்றதாக மாறியது. இதனால், இலகுரக மற்றும் கனரக வாகனங்கள் ஆமை வேகத்தில் ஊர்ந்து செல்கின்றன.
இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி விழுந்து விபத்துகளில் சிக்குகின்றனர். மேலும், சிம்ஸ் மருத்துவமனைக்கு வந்து செல்லும் அவசர சேவை வாகனங்களான
ஆம்புலன்ஸ் உள்ளிட்டவை, நெரிசலில் சிக்கி தவிக்கின்றன. நோயாளிகளுகளும் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர்.
இதுகுறித்து, குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறுகையில், ‘அனைத்து பணிகளும் இரண்டு நாட்களில் நிறைவடையும்; அதன்பின், நெடுஞ்சாலை துறையிடம் ஒப்படைக்கப்பட்டு சீரமைக்கப்படும்’ என்றனர்.