ஒரு வாரத்தில் 6 டன் பிளாஸ்டிக் பறிமுதல்

தமிழகத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் ஒருமுறை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது. மீறி பயன்படுத்துபவர்களிடம் அபராதமும் வசூலிக்கப்படுகிறது.

அதன்படி பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 20-ந்தேதி முதல் 26-ந்தேதி வரையிலான ஒரு வார காலத்தில் 5 ஆயிரத்து 850 வணிக நிறுவனங்கள் மற்றும் அங்காடிகளில் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வுகளில் 6 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.8 லட்சத்து 500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதில் ராயபுரம் மண்டலத்தில் மட்டும் அதிகபட்சமாக 5 ஆயிரத்து 37 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக தெருக்களில் சுற்றித்திரியும் மாடுகள் மாநகராட்சி பொது சுகாதாரத்துறையினரால் கால்நடை பிடிக்கும் வாகனங்கள் மூலம் பிடிக்கப்பட்டு, புதுப்பேட்டை மற்றும் பெரம்பூரில் உள்ள மாநகராட்சி மாட்டு தொழுவங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு வருகின்றது. அவ்வாறு தெருக்களில் சுற்றித்திரிந்து, மாநகராட்சியால் பிடிக்கப்படும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராத தொகையாக மாடு ஒன்றுக்கு ரூ.1,550 விதிக்கப்படுகிறது.

மாநகராட்சி சுகாதாரத்துறையின் சார்பில் கடந்த 20-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை மொத்தம் 226 மாடுகள் பிடிக்கப்பட்டு உரிமையாளர்களுக்கு தலா ரூ.1,550 வீதம் ரூ.3 லட்சத்து 50 ஆயிரத்து 300 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக கோடம்பாக்கம் மண்டலத்தில் 21 மாடுகள் பிடிக்கப்பட்டுள்ளன.

மேற்கண்ட தகவல் பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *