17 குடும்பங்களுக்கு பழங்குடியினர் சாதி சான்றிதழ்
திருவொற்றியூர்: திருவொற்றியூர் ராஜாஜி நகர் அருகே நலிவுற்ற இருளர் வகுப்பை சேர்ந்த 17 குடும்பங்கள் சாலையோரம் கொட்டகை அமைத்து, மாநகராட்சியில் குப்பை கிடங்கில் பிளாஸ்டிக் மற்றும் பேப்பர்களை சேகரித்து அதிலிருந்து வரக்கூடிய வருமானத்தில் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு அடையாள அட்டை ஏதும் இல்லாததால் குழந்தைகளை படிக்க வைப்பதற்கும் அரசின் சலுகைகளை பெறுவதற்கும் முடியாத நிலை இருந்தது. இதைடுத்து தங்களுக்கு சாதி சான்றிதழ் மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்க வேண்டும் என்று திருவொற்றியூர் தாசில்தார் சகாயராணியிடம் மனு அளித்திருந்தனர். அதன்படி 17 குடும்ப தலைவர்களுக்கு பழங்குடியினர் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி தண்டையார்பேட்டை கோட்டாட்சியர் இப்ராஹிம் தலைமையில் நடந்தது.
தாசில்தார் சகாயராணி முன்னிலை வகித்தார். கே.பி.சங்கர் எம்எல்ஏ கலந்துகொண்டு 17 குடும்ப தலைவர்களுக்கும் பழங்குடியினர் சாதி சான்றிதழ் வழங்கினார். பின்னர் சாதி சான்றிதழ் பெற்றவர்கள் தாசில்தார் அலுவலகத்தில் உள்ள இ-சேவை மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு வாக்காளர் அடையாள அட்டைக்கான ஆவணங்களும் பதிவு செய்யப்பட்டது. இந்த சாதி சான்றிதழ் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை வைத்து தங்களுக்கு தேவையான ஆதார் அடையாள அட்டை மற்றும் தமிழக அரசின் சலுகைகளை எளிதாக இவர்கள் பெற்றுக் கொள்ளலாம் என வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அப்போது, வருவாய் ஆய்வாளர் பழனியராஜன், கிராம நிர்வாக அலுவலர் சுப்ரியா, மண்டல உதவி ஆணையர் விஜயபாபு, செயற்பொறியாளர் பாபு உள்பட பலர் பங்கேற்றனர்.