3 பேருடன் நடந்த மின் குறைதீர் முகாம்; காத்திருந்த 40 அதிகாரிகளுக்கு ‘அதிர்ச்சி’
அம்பத்தூர்; மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம், அம்பத்துார், கே.கே.நகர், மயிலாப்பூர், தண்டையார்பேட்டை ஆகிய நான்கு கோட்டங்களில், நேற்று காலை 11:00 மணிக்கு நடந்தது.
இதில், அம்பத்துார் தொழிற்பேட்டை மூன்றாவது பிரதான சாலையில் அமைந்துள்ள, துணை மின் நிலைய வளாகம், செயற்பொறியாளர் அலுவலகத்தில், கோட்ட மேற்பார்வை பொறியாளர் மலைவேந்தன் தலைமையில் நடந்த கூட்டத்தில், 40க்கும் மேற்பட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
ஆனால், நுகர்வோர் மூன்று பேர் மட்டுமே முகாமில் பங்கேற்று தங்களது குறைகளை அதிகாரிகளிடம் தெரிவித்தனர். இதனால், துவங்கிய வேகத்திலே முகாம் நிறைவடைந்தது. இதையடுத்து அலுவலர்கள் கலந்தாய்வு கூட்டத்தை அதிகாரிகள் துவங்கினர்.
மின் குறைதீர் முகாம் குறித்த போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. குறைதீர் கூட்டம் நடப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன், கூட்டம் நடைபெறும் தேதி, நேரம், இடம் குறித்த தகவல்கள், அந்தந்த மின்வாரிய அலுவலகங்கள், மின்நுகர்வோரின் மொபைல்போனுக்கு குறுஞ்செய்தி வாயிலாக தெரியப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிடில், வெறும் கண்துடைப்பிற்கும் நடத்தப்படும் முகாமாக மாறும் என, சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.