அடையாளம் தெரியாத வாகனம் மோதி புது மாப்பிள்ளை பலி
பெரும்பாக்கம், மேடவாக்கம் அடுத்த சந்தோஷ்புரத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 22. இவர், ஓ.எம்.ஆர்., சாலையில் உள்ள பேக்கரியில் பணிபுரிந்தார். இவரது மனைவி மலர், 21. இவர்களுக்கு திருமணமாகி மூன்று மாதம் ஆகின்றன.
இந்நிலையில், வெங்கடேசன், நேற்று அதிகாலை 5:00 மணிக்கு, தன்’பஜாஜ் பல்சர்’ பைக்கில்வேலைக்கு புறப்பட்டார். மேடவாக்கம், செம்மொழி சாலையில், பெரும்பாக்கம் மத்திய தமிழ் ஆராய்ச்சி மையம் அருகே சென்றபோது, அடையாளம் தெரியாத வாகனம் வெங்கடேசனின் பைக்கில் மோதியது.
இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த வெங்கடேசன், சம்பவ இடத்திலேயே பலியானார்.
தகவல் அறிந்த பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு போலீசார், வெங்கடேசன் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.