தாம்பரத்தில் தெருநாய்கள் கணக்கெடுப்பு தனியாருடன் மாநகராட்சி கை கோர்ப்பு
தாம்பரம் தாம்பரம், பல்லாவரம், பம்மல், அனகாபுத்துார், செம்பாக்கம், திருநீர்மலை, பெருங்களத்துார், பீர்க்கன்காரணை, சிட்லப்பாக்கம், மாடம்பாக்கம் ஆகிய, 10 உள்ளாட்சி பகுதிகளை இணைத்து, தாம்பரம் மாநகராட்சி உருவாக்கப்பட்டது. இவை, ஐந்து மண்டலங்கள், 70 வார்டுகளாக உள்ளன.
இம்மாநகராட்சியில் தெரு நாய்களின் எண்ணிக்கையும், அதனால், மக்கள் பாதிக்கப்படும் சம்பவங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
மாநகராட்சி சார்பில் தெரு நாய்கள் பிடிக்கப்பட்டு, கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொண்டாலும், முழுதுமாக கட்டுப்படுத்த முடியவில்லை.
அதே நேரத்தில், நாய்கள் எந்த இடத்தில் அதிகமாக உள்ளன என்பது தெரியாததால், கருத்தடை செய்ய நாய்களை பிடிப்பதில், மாநகராட்சி சுகாதாரத் துறையினர் சிரமப்படுகின்றனர்.
இதை கருத்தில் கொண்டு, மாநகராட்சியில் உள்ள 70 வார்டுகளிலும், தெரு நாய்களின் எண்ணிக்கை குறித்து கணக்கெடுப்பு நடத்த, நிர்வாகம் திட்டமிட்டுள்ளது
உலக கால்நடை சேவை என்ற தனியார் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து, இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.
இதன் வாயிலாக, தெரு நாய்களின் எண்ணிக்கையும், எந்த இடங்களில் அதிமாக சுற்றித்திரிகின்றன என்பதையும் அறிந்து, கருத்தடை அறுவை சிகிச்சையை முறைப்படுத்த நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
பெருங்களத்துார் குண்டுமேடு, அனகாபுத்துார் ஆகிய இடங்களில் உள்ள கருத்தடை மையங்களை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. ஓரிரு வாரங்களில் முடிந்துவிடும். தற்போது, குரோம்பேட்டை பாரதிபுரம் கருத்தடை மையம் மட்டுமே இயங்குகிறது. மாதந்தோறும், 350 தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. எவ்வளவு நாய்களுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது என்பது தெரியவில்லை.
– பொற்செல்வன்,
நகர்நல அலுவலர், தாம்பரம் மாநகராட்சி.
சர்வே எடுக்கப்படும் முறை
வார்டுக்கு இருவர் என, 70 வார்டுகளுக்கு 140 பேர் கணக்கெடுப்பர்; ஒரே தெருவில் அடுத்தடுத்து மூன்று நாட்கள், மூன்று குழு, நாய்களை புகைப்படம் எடுக்கும்.கிடைக்கும் புகைப்படங்கள் வைத்து, மொத்த நாய்களின் எண்ணிக்கை கணக்கிடப்படும். மேலும், கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நாய்கள் எத்தனை, குட்டி நாய்கள் எத்தனை, வெறி பிடித்த நாய்கள் எத்தனை போன்ற அனைத்து விபரங்களும் தெரிந்துவிடும்.இந்த கணக்கெடுப்பை கொண்டு, கருத்தடை அறுவை அறுவை சிகிச்சையை எளிதாக முறைப்படுத்தலாம் என, மாநகராட்சி தெரிவிக்கிறது.