கோவிலம்பாக்கம் மேடவாக்கம் மெயின் ரோட்டில் மெட்ரோ ரயில் பணியில் ஈடுபட் ட ராட்சத கிரேன் தீப்பற்றி எரிந்தது: நள்ளிரவில் பரபரப்பு
வேளச்சேரி, பிப்.4: கோவிலம்பாக்கத்தில் நள்ளிரவில் மெட்ரோ ரயில் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ராட்சத கிரேன் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையில் தற்போது ₹63,246 கோடி மதிப்பில் 118.9 கிலோ மீட்டர் தூரத்துக்கு 3 வழித்தடங்களில் 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப்பணி நடைபெறுகிறது. இதில், கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி புறவழிச்சாலை வரை 26.1 கிலோ மீட்டர் தொலைவுக்கும், மாதவரம் – சிறுசேரி சிப்காட் வரை 45.8 கி.மீட்டருக்கும், மாதவரம் – சோழிங்கநல்லூர் வரை 47 கிலோ மீட்டர் தூரத்துக்கும் என 118.9 கி.மீ தூரத்துக்கு புதிய வழித்தடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இதில், மாதவரம் – சோழிங்கநல்லூர் வழித்தட மெட்ரோ ரயில் திட்டத்திற்காக, கோவிலம்பாக்கம் மேடவாக்கம் மெயின் ரோடு பகுதியில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இதில், 7 பேர் கொண்ட குழுவினர், கான்கிரீட் பாதை அமைக்க போடப்பட்ட தடுப்பு பலகைகளை, 50 டன் கொண்ட ராட்சத கிரேன் மூலம் அகற்றும் பணியில் நேற்று முன்தினம் இரவு ஈடுபட்டனர். நள்ளிரவில், டிரைவர் கிரேனை இயக்கியபோது, அதன் பேட்டரி வெடித்து தீப்பிடித்தது. காற்றில் தீ பரவி கிரேன் மீது பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. உடனடியாக டிரைவர், கீழே குதித்து தப்பினார்.
பணியில் இருந்த தொழிலாளர்கள் உடனடியாக தீயை அணைக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. இதனால், தீயணைப்புத்துறை மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் விரைந்து வந்த போலீசார், மேடவாக்கம் மெயின் ரோட்டில் போக்குவரத்தை தடை செய்தனர். பின்னர், தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து, சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் போராடி தீயை முழுவதுமாக அணைத்தனர். பகல் நேரத்தில் இந்த சாலையில் அதிக எண்ணிக்கையிலான வாகனங்கள் செல்வது வழக்கம். அப்போது, இந்த தீவிபத்து ஏற்பட்டிருந்தால் பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்பட்டு இருக்கும். ஆனால், நள்ளிரவில் தீவிபத்து ஏற்பட்டதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த தீவிபத்து குறித்து மேடவாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.