க்யூ. ஆர்., குறியீடு பயன்படுத்தி மூலிகைகள் குறித்து அறியலாம்
தாம்பரம், :தாம்பரம் சானடோரியத்தில், தேசிய சித்த மருத்துவ நிறுவனம் இயங்கி வருகிறது. இம்மருத்துவமனைக்கு, தினமும் நுாற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். பலர், உள்நோயாளியாக தங்கி சிகிச்சை பெறுகின்றனர்.
இம்மருத்துவமனை வளாகத்தில், சித்த மருத்துவ படிப்பு மாணவர்களின் கல்விக்காக, சித்த மருந்து தயாரிக்க பயன்படக்கூடிய வேம்பு, புங்கன், துளசி, செங்கொடி வேலி உள்ளிட்ட, 350க்கும் மேற்பட்ட மூலிகை செடிகள் கொண்ட தோட்டம் உள்ளது.
இந்த மூலிகை செடிகளை பொதுமக்களும் தெரிந்து, பயனடையும் வகையில், க்யூ.ஆர்., குறியீடு வசதியை ஏற்படுத்த மருத்துவமனை நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. அதாவது, ஒவ்வொரு செடியின் முன், க்யூ.ஆர்., குறியீடு வைக்கப்பட உள்ளது.
பார்வையிடும் பொதுமக்கள், தங்களுடைய மொபைல் போன்களில், ‘க்யூ.ஆர்., கோடு’ ‘ஸ்கேன்’ செய்தால், அந்த மூலிகை செடியின் தாவரவியல் பெயர், சமஸ்கிருத பெயர்.
தமிழ் பெயர், வளரும் இடம், எப்படி இருக்கும், பூ காய்களை வைத்து செடியை கண்டுபிடிப்பது எப்படி, மருத்துவ பயன்கள், அந்த செடியில் இருந்து தயாரிக்கப்படும் மருந்து, இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள ஆராய்ச்சி உள்ளிட்ட முழு விபரங்களை தெரிந்துக் கொள்ளலாம்.
மூலிகை செடி தோட்டத்தை பார்வையிடுவதோடு மட்டுமின்றி, ஒவ்வொரு செடியின் முழு விபரங்களையும், ஒவ்வொருவரும் முழுமையாக தெரிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில், இந்த முன்னெடுப்பு எடுக்கப்பட்டுள்ளது.
ஒரு மாதத்தில், அனைத்து செடிகள் முன், ‘க்யூ.ஆர்., குறியீடு’ பொருத்தப்பட்டு விடும் என, மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.