வட சென்னை ஓராண்டில் வளர்ச்சியடையும் திட்ட பணிகள் ஆய்வுக்கு பின் முதல்வர் உறுதி

‘ஓராண்டிற்குள் வடசென்னை வளர்ந்த சென்னையாக மாறும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது,” என முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

சென்னை நகரில், சமச்சீரான வளர்ச்சியை உறுதி செய்யும் வகையில், வடசென்னை வளர்ச்சி திட்டம் 1,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் என, 2023ல் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

இத்திட்டத்தின் கீழ் பள்ளிகளை மேம்படுத்துதல், வீடுகள் கட்டுதல், புதிய பேருந்து நிலையங்கள், துணை மின் நிலையங்கள் அமைத்தல், ‘சிசிடிவி’ கேமராக்களை பொருத்தி பாதுகாப்பை உறுதி செய்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

வடசென்னை வளர்ச்சி திட்டம் தற்போது, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, வீட்டு வசதி, எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு துறைகள் வாயிலாக விரிவடைந்துள்ளது. அதனால், திட்ட மதிப்பீட்டு தொகையும் 6,309 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதில், 252 திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ள

இதில், கொளத்துார் வண்ண மீன்கள் வர்த்தகம் மையம்; கன்னிகாபுரம் விளையாட்டு மைதானம்; கணேசபுரம் மேம்பாலம்; ஸ்டான்லி மருத்துவமனை சாலையில் கட்டப்பட்டு வரும் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு; தண்டையார்பேட்டை பேருந்து நிலையம் என, 474.69 கோடி ரூபாய் செலவில், ஐந்து திட்ட பணிகளை, ஆய்வு செய்தார்.

மேலும், கன்னிகாபுரத்தில் 59.15 கோடி ரூபாய் செலவில் தனி கட்டடங்கள் மற்றும் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளுக்கான குடிநீர் வினியோக மேம்பாட்டு பணிகளுக்கு, அடிக்கல் நாட்டினார்.

இப்பணிகளை ஆய்வு செய்த பின், முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது:

வடசென்னை வளர்ச்சி திட்டத்திற்கு, 1,000 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என சட்டசபையில் அறிவித்தேன். இப்போது, பல்வேறு துறைகளின் ஒத்துழைப்போடு 6,309 கோடி ரூபாய் மதிப்பில் பணிகள் நடந்து வருகின்றன.

மொத்தமுள்ள 252 பணிகளில் 29 பணிகள் முழுமையாக முடிந்துள்ளன. எஞ்சியுள்ள பணிகள் விரைவில் முடியவுள்ளன.

ஓராண்டு காலத்திற்குள் அனைத்து பணிகளையும் முடிக்க வேண்டும் என, அனைத்து துறை அலுவலர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளேன். வடசென்னையை பொறுத்தவரை ஓராண்டிற்குள் வளர்ந்த சென்னையாக நிச்சயமாக உருவாகும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

இவ்வாறு முதல்வர் கூறினார்.

முதல்வர் ஆய்வின்போது ஹிந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை கூடுதல் தலைமை செயலர் காகர்லா உஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முதல்வர் ஆய்வால் வாகன நெரிசல்

வடசென்னையில் நடந்து வரும் வடசென்னை வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்யும் விதமாக, வடசென்னையில் பிரதான சாலைகள் வழியாக முதல்வர் ஸ்டாலின் பயணித்தார்.முதல்வருடன் கான்வாயில் பாதுகாப்பு வாகனங்கள், அமைச்சர், உயர் அதிகாரிகள், மேயர், மாநகராட்சி மண்டல குழு தலைவர்கள் மற்றும் கவுன்சிலர்கள் வாகனங்களில் அணிவகுத்தனர். இச்சாலைகளில் மழைநீர் கால்வாய், மெட்ரோ ரயில் உள்ளிட்ட பல்வேறு கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. இதனால், போக்குவரத்து தாமதம் ஏற்படுகிறது.இந்நிலையில் முதல்வர் காலை 9:30 மணி முதல் ஆய்வு செய்ததால், பல பிரதான சாலைகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால், பள்ளி, கல்லுாரிக்கு சென்ற மாணவர்கள், அலுவலகம், வேலைக்கு சென்றோர் கடும் அவதிக்குள்ளாகினர். இதுபோன்ற ஆய்வை அலுவலக நேரத்தில்தான் முதல்வர் ஸ்டாலின் மேற்கொள்ள வேண்டுமா என மாநகர பஸ் பயணியர், பொதுமக்கள் விரக்தியுடன் கூறினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *