மன அழுத்தத்தால் பாதித்த குழந்தைகளை காக்க திட்டம் சுப்ரியா சாஹு தெரிவிப்பு
சென்னை: சென்னை எழும்பூரில், ‘ஸ்கார்ப்’ அமைப்பு சார்பில், மூன்று நாள் நடக்கும் ‘மைண்ட்ஸ்கேப்’ எனும் மன நல விழிப்புணர்வு நிகழ்வு, நேற்று துவங்கியது. இதில், மக்கள் நல்வாழ்வுத் துறை செயலர் சுப்ரியா சாஹு பேசியதாவது:
நாட்டில் மனநல ஆலோசனை வழங்குவதில், தமிழகம் சிறந்து விளங்குகிறது. மக்களிடையே ஏற்படும் பயம், கலக்கம், பதற்றம், மன அழுத்தம் போன்றவற்றுக்கு, டாக்டர்கள் பத்மாவதி மற்றும் தாரா உள்ளிட்டோர், சிறந்த தீர்வை வழங்குகின்றனர். இந்த அமைப்பில், 10,000க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் செயல்பட்டு வருகின்றனர்.
ஒரே குடும்பத்தில் வசிப்பவர்களும், ஒருவொருக்கு ஒருவர் பேசிக்கொள்ளாததால், மன அழுத்தம் அதிகரித்துள்ளது. இவர்கள் மன அழுத்தத்திற்கு பாதிக்கப்படும் போது, குழந்தைகளும் மனநலம் பாதிப்புக்கு ஆளாகின்றனர்.
தமிழகத்தில் ஆதரவற்ற மன நோயாளிகளுக்கு, உதவும் வகையிலான திட்டத்தை கொண்டு வர,முதல்வரிடம் ஆலோசித்து வருகிறோம். மன நலத்தால் பாதிக்கப்படும் குழந்தைகளையும், பாதுகாக்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில், பேன்யன், சென்னை மிஷன், கேண்டல்ஸ், டிக்னிடி பவுண்டேஷன், மேஜிக் பஸ், ஸ்நேஹா, ஸங்கல்ப், வோவ் உள்ளிட்ட 25 தொண்டு நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.