கிராமிய கலைநிகழ்ச்சிகளுடன் உற்சாக வரவேற்பு: செஸ் ஒலிம்பியாட் ஜோதி

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடர், சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்த போட்டித்தொடர் ஆகஸ்டு 10-ந்தேதி வரை நடைபெறுகிறது.

இந்த போட்டித்தொடரின் தொடக்க விழா, சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் மிக பிரமாண்டமாக நாளை நடைபெறுகிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு, செஸ் ஒலிம்பியாட் போட்டித்தொடரை தொடங்கி வைக்கிறார்.

செஸ் ஒலிம்பியாட்டின் மிக முக்கியமான நிகழ்வாக கடந்த மாதம் 19-ந்தேதி டெல்லியில் செஸ் ஒலிம்பியாட் ஜோதியை பிரதமர் நரேந்திர மோடி ஏற்றி தொடங்கி வைத்தார். ஜோதி வடமாநிலங்கள் தாண்டி 75 நகரங்களை கடந்து 23-ந்தேதி தமிழகத்துக்கு (கோவை மாநகரம்) வந்தது. இந்த ஜோதி இன்று காலை மாமல்லபுரத்துக்கு வந்தது. பின்னர் அங்கிருந்து சென்னை மாநிலக்கல்லூரி அருகே உள்ள திடலுக்கு வந்தது.

இதையொட்டி அங்கே ஒலிம்பியாட் ஜோதியை வரவேற்க குதிரையாட்டம் உள்ளிட்ட கிராமிய கலை நிகழ்ச்சிகளும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. ஆரவாரங்களுக்கிடையே இந்த ஒலிம்பியாட் ஜோதியை உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. வரவேற்றார். அந்த ஜோதியை, செஸ் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்திடம் அவர் வழங்கினார்.

அதனைத்தொடர்ந்து திறந்த வாகனத்தில் செஸ் ஒலிம்பியாட் ஜோதியை விஸ்வநாதன் ஏந்தியபடி செல்ல, அவருக்கு பின்னால் போலீசாரின் மோட்டார் வாகனங்கள் அணிவகுத்தன. கல்லூரி மாணவ-மாணவிகள், என்.எஸ்.எஸ்., என்.சி.சி. மாணவ-மாணவிகள் என ஏராளமானோர் சைக்கிளில் அணிவகுத்தனர்.

மெரினா காமராஜர் சாலைவழியாக வந்த ஜோதி ஊர்வலம், நேப்பியர் பாலம் அருகே வந்தது. மெகா செஸ் அட்டையாக மாறி போன நேப்பியர் பாலத்தில் இந்த ஊர்வலம் வந்தது. பின்னர் பல்லவன் சாலை வழியாக சென்டிரல் கடந்து பெரியமேடு வழியாக போட்டியின் தொடக்க விழா அரங்கேறும் நேரு விளையாட்டு அரங்கத்துக்கு செஸ் ஒலிம்பியாட் ஜோதியை விஸ்வநாதன் கொண்டு வந்தார். ஜோதி சென்ற வழியெங்கும் மக்கள் இதனை பார்த்து ரசித்தார்கள்.

நேரு விளையாட்டு அரங்கத்துக்கு கொண்டு வரப்பட்ட இந்த ஜோதியை, தமிழக அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை முதன்மை செயலாளர் அபூர்வா மற்றும் அதிகாரிகள், விளையாட்டு வீரர்கள் வரவேற்றனர். அதனைத்தொடர்ந்து தொடக்க விழா அரங்கேறும் இடத்துக்கு ஜோதி கொண்டு செல்லப்பட்டது.

அதன்பின்னர் விஸ்வநாதன் ஆனந்த் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அடுத்து 5 அல்லது 10 ஆண்டுகளில் உருவெடுக்கும் செஸ் வீரர்கள் அனைவருமே, சென்னையில் நடந்த செஸ் ஒலிம்பியாட் போட்டித்தான் எங்கள் வெற்றிக்கு காரணம் என்பார்கள். இந்த செஸ் ஒலிம்பியாட் ஜோதியை ஏந்தி சென்றது பெருமை அளிக்கிறது. மறக்க முடியாத அனுபவமும் கூட. பல நகரங்களுக்கு போட்டித்தொடருக்காக சென்றிருக்கிறேன். சென்னையில் செய்தது போல வெறெங்குமே இவ்வளவு பெரிய ஏற்பாடுகளை நான் பார்த்ததே இல்லை.

நான் ஜோதியை ஏந்தி செல்லும்போது பஸ்களில் சென்ற பயணிகள் என்னை கூப்பிட்டு கையசைத்து கூப்பிட்டு பாராட்டியது மகிழ்ச்சி அளிக்கிறது என அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *