மாதவரத்தில் பொது குடிநீர் சப்ளை நிறுத்தம் பரிதவிப்பு! வாரிய நடவடிக்கையால் பகுதிவாசிகள் பாதிப்பு
மாதவரம் : மாதவரம் மண்டலத்தில் குடிநீர் இணைப்பு பெறாத குடும்பங்கள் பயன்படுத்தி வந்த பொது குடிநீர் வினியோகத்தை, வாரிய அதிகாரிகள் 10 நாட்களாக நிறுத்தியுள்ளனர். இதனால் 500 குடும்பங்களுக்கு மேல் சிரமப்படுவதாக, அப்பகுதிவாசிகள் தெரிவிக்கின்றனர்.
மாதவரம் மண்டலத்தில், ஒரு லட்சம் வீடுகள்உள்ளன. இப்பகுதியினரின் ஒருநாள் குடிநீர் தேவை 10.7 மில்லியன் லிட்டர்.
இதற்காக, பல இடங்களில், கோடிக்கணக்கான ரூபாய் செலவில் புதிதாக குழாய்கள் பதிக்கப்பட்டு உள்ளன. மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் கட்டப்பட்டு உள்ளன.
உவர்ப்பு நீர்
குழாய் வாயிலாகவும், லாரிகள் வாயிலாகவும், இப்பகுதிகளுக்கு வாரியம் குடிநீர் வழங்கி வருகிறது. தவிர, குடிநீர் இணைப்பை அதிகப்படுத்தும் முயற்சியில் வாரியம் ஈடுபட்டு வருகிறது.
எனினும், 30வது வார்டு லட்சுமிபுரம் பகுதியில் உள்ள காந்திஜி தெரு மற்றும் திலகர் தெருக்களில் வசிக்கும் பெரும்பாலானோர், குடிநீர் இணைப்பு பெறவில்லை. 500 வீடுகள் இணைப்பு பெற கோரி, வாரிய அதிகாரிகள் பலமுறை அறிவுறுத்தி வந்துள்ளனர்.
ஆனால் அவர்கள், பொது குடிநீர் வினியோகத்திற்காக தெருக்களில் வைக்கப்பட்டுள்ள 3,000 லிட்டர் கொள்ளளவு உடைய தொட்டிகளில் குடிநீர் பிடித்து பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில், பொது வினியோக தொட்டிக்கு குடிநீர் வழங்குவதை, வாரியம் திடீரென நிறுத்தியுள்ளது. இதனால், குடிநீர் கிடைக்காமல், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பரிதவிக்கின்றனர்.
அப்பகுதிவாசிகள் கூறியதாவது:
பருவமழை மற்றும் சாலை பணிகளால், குடிநீர் வாரியம், குழாய்வழி தண்ணீரை முறையாக வழங்கவில்லை
இதனால், மாதவரம் மண்டலத்திற்குட்பட்ட பெரும்பாலான பகுதிகளில், லாரி குடிநீரே வினியோகிக்கப்படுகிறது. ஆழ்துளை கிணற்று நீரை பயன்படுத்தினாலும், குடிப்பதற்கு உகந்ததாக இல்லை.
இந்நிலையில், தொட்டிகள், பொதுக் குழாய்களில் தரப்பட்ட குடிநீர் வினியோகத்தை, வாரியம் 10 நாட்களாக நிறுத்தியுள்ளது. காரணம் கேட்டால், குடிநீர் இணைப்பு பெற வேண்டும் என கறாராக கூறுகிறது.
வாரியத்தின் இந்த நடவடிக்கையால், ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர், வாரிய குடிநீர் இல்லாமல், தனியாரிடம் கேன் குடிநீரை 30 ரூபாய்க்கு வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
வாரிய அதிகாரிகள் கூறியதாவது:
மழைக்காலத்தில் சாலை வெட்டுக்கு அனுமதி கிடைக்காததால், குழாய்களை பதிக்க முடியாமல், குடிநீர் இணைப்பு தருவது நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது, சாலை வெட்டு பணிக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
மூன்று தவணை
ஜனவரி முதல், ஆன்லைனில் விண்ணப்பங்களை வரவேற்கிறோம். தொடர்ச்சியாக பலமுறை அறிவுறுத்தியும் இதுவரை மூன்று பேர் மட்டுமே குடிநீர் இணைப்புக்கு விண்ணப்பித்துள்ளனர்.
இருநுாறு சதுரடிக்கு குறைவாக உள்ள வீடுகளுக்கு, குடிநீர் இணைப்புக்காக 7,500 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வீட்டின் அளவுக்கு ஏற்ப கட்டணம் மாறுபடும். அவர்கள் மூன்று தவணைகளாகவும் கட்டலாம்.
தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டதாலேயே, சில நாட்களாக குடிநீர் வினியோகம் செய்வதில் தாமதம் ஏற்பட்டது. மற்றபடி, குடிநீர் வினியோகத்தை முழுதும்
நிறுத்தவில்லை.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்