பால் முகவர்களிடம் ரூ.6 லட்சம் மோசடி: ‘ஆவின் ‘ ஊழியர் கைது
கொருக்குப்பேட்டை, திருவொற்றியூர், துலுக்காணம் தெருவைச் சேர்ந்தவர் சேர்மத்தாய், 39; ‘ஆவின்’ பால் முகவர். வீட்டின் அருகே ஆவின் பால் பாக்கெட் விற்கிறார்.
இவர், விற்பனை செய்யும் பால் பாக்கெட்களுக்கான பணத்தை, பழைய வண்ணாரப்பேட்டையிலுள்ள ஆவின் அலுவலகத்தில் தினமும் செலுத்த வேண்டும்.
தினம் சென்று வருவதில் இவருக்கு சிரமம் ஏற்பட்டதால், பால் பாக்கெட்களுக்கு உரிய பணத்தை, தன் கிரெடிட் கார்டை பயன்படுத்தி எடுத்துக்கொள்ளும்படி, ஆவின் அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரியும் சித்தராஜிடம் கூறியுள்ளார்.
அதற்காக தன் கிரெடிட் கார்டு, கடவு சொல்லையும் தந்துள்ளார். அதை பயன்படுத்தி, சித்தராஜ் பணம் பெற்று, பால் பாக்கெட்டுகளை அனுப்பி வந்துள்ளார்.
இந்நிலையில் சேர்மத்தாய், கிரெடிட் கார்டு கணக்குகளை சரிபார்த்தபோது, விற்பனையான பால் பாக்கெட்டுகளுக்கும் மேலாக பணத்தை எடுத்து, சித்தராஜ் மோசடி செய்தது தெரிய வந்தது.
மேலும், சேர்மத்தாயின் காருக்கு தினம் 1,000 ரூபாய் வாடகை தருவதாக கூறி, தனக்கு சொந்தமான டிராவல்ஸ் நிறுவனத்தில், அவரது காரை சித்தராஜ் பயன்படுத்தி வந்துள்ளார். இதற்கான வாடகை தொகையையும், சேர்மத்தாயிடம் தரவில்லை.
கார் வாடகை பாக்கி, கிரெடிட் கார்டில் பெற்ற பணம் என மொத்தம் 3.24 லட்சம் ரூபாய் பெற்று, சித்தராஜ் மோசடி செய்துள்ளார்.
அதேபோல், புது வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த சுரேஷ்குமார் என்ற பால் முகவரிடம், ஆவின் பாலுக்கான பணத்தை எடுப்பதாக கூறி, அவரது டெபிட் கார்டில் இருந்து 2.58 லட்சம் ரூபாயை, சித்தராஜ் மோசடி செய்துள்ளார்.
சேர்மத்தாய், சுரேஷ்குமார் புகாரின்படி விசாரித்த கொருக்குப்பேட்டை போலீசார், அம்பத்துார், வெங்கடேஸ்வரா நகரைச் சேர்ந்த ஆவின் ஊழியர் சித்தராஜை, 30, கைது செய்து நேற்று சிறையில் அடைத்தனர்.