கோவில் நகரமான திரு வேற்காடில் அதிகாலையிலே கிடைக்குது ‘சரக்கு’

ஆவடி, ஆவடி போலீஸ் கமிஷனரகத்தில், பல அரசு மதுபான கடைகள் விதிமீறி செயல்படுவதாக தொடர் குற்றச்சாட்டு உள்ளது. குறிப்பாக, அதிகாலை முதலே மதுபான கடையில் ‘குடி’மகன்கள் நடமாட்டம் தொடர்கிறது.

இதற்கு அரசு அறிவித்த நேரம் தவிர்த்து முறைகேடாக கள்ளச்சந்தையில் மதுபானங்கள் விற்கப்படுவதே காரணம். இதனால், குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

குறிப்பாக, ஆவடி கன்னியம்மன் நகர், பேருந்து நிறுத்தம் அருகே உள்ள மதுபான கடைகள் நேரம் காலமின்றி இயங்கி வருகின்றன. இதனால், இளைஞர்கள் மதுவிற்கு அடிமையாகி, மெதுவாக வாழ்வை தொலைத்து வருகின்றனர்.

கோவில் நகரமான திருவேற்காடு பகுதியில், 1 கி.மீ., சுற்றளவில் மூன்று மதுபான கடைகள், அதிகாலை முதலே செயல்படுகின்றன. அங்குள்ள ‘குடி’மகன்கள் மது போதையில் பேருந்து நிலையத்தில் படுத்து கிடப்பது வாடிக்கையாக உள்ளது. இதனால், திருவேற்காடு கருமாரியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

அதேபோல், கோலடி சாலை, அம்பத்துார் அத்திப்பட்டு சாலையில் உள்ளிட்ட பல இடங்களில் விதிமீறி மதுபான கடைகள் இயங்கி வருகின்றன.

கடந்த 2023 ல், போலீஸ் கமிஷனர் சங்கர் பொறுப்பேற்றபோது, விதிமீறி இயங்கும் மதுபான கடைகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன் பின், சில நாட்கள் கள்ளச்சந்தையில் மது விற்பது, விதிமீறி இயங்குவது குறைந்தது.

இந்நிலையில், விதிமீறி இயங்கும் மதுபான கடை எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. எனவே, அவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *