சொத்து வரி கட்டாதோருக்கு ‘நோட்டீஸ்’ 2 லட்சம் பேர்! எளிதில் செலுத்த க்யூ .ஆர். , குறியீடு வசதி

சென்னை மாநகராட்சியில் முறையாக சொத்து வரி செலுத்தாத இரண்டு லட்சம் கட்டடங்களில், எச்சரிக்கை ‘நோட்டீஸ்’ ஒட்டப்பட்டு உள்ளது. கட்டட உரிமையாளர்கள், மாநகராட்சி அலுவலகங்களுக்கு வருவதற்கு பதிலாக, நோட்டீசில் அச்சிடப்பட்டுள்ள க்யூ.ஆர்., குறியீடை ஸ்கேன் செய்து, வரியை செலுத்தலாம் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னை மாநகராட்சியில், 13 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்து உரிமையாளர்கள் உள்ளனர். அவர்களிடமிருந்து, ஆண்டுக்கு 1,850 கோடி ரூபாய்க்கு மேல், மாநகராட்சி சொத்து வரி வசூலித்து வருகிறது.

ஒவ்வொரு நிதியாண்டிலும், அரையாண்டு அடிப்படையில் சொத்து வரி வசூலிக்கப்படுகிறது.

இதில், அரையாண்டு துவங்கும் ஏப்., 1 முதல் 30ம் தேதிக்குள் வரி செலுத்துவோருக்கும், இரண்டாம் அரையாண்டில், அக்., 1 முதல் 30 தேதிக்குள் வரி செலுத்துவோருக்கும், 5 சதவீதம் அதிகபட்சம், 5,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.

இந்த நாட்களை தவறவிடுவோரிடம், 2 சதவீத தண்டசெலவு அடிப்படையில், கூடுதலாக சொத்து வரி வசூலிக்கப்படுகிறது.

இந்நிலையில், சென்னை மாநகராட்சி சார்பில், ஒவ்வொரு நிதியாண்டும் முறையாக சொத்து வரி செலுத்துவோருக்கு, மாநகராட்சி சார்பில், குடியரசு, சுதந்திர தின விழாவில் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படுகிறது.

அதேபோல், முறையாக சொத்து வரியை செலுத்தாதோர் மீது, மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.

சென்னை மாநகராட்சிக்கு நீண்ட கால சொத்து வரி பாக்கி வைத்துள்ள வணிக கட்டடங்கள் மற்றும் அடுக்குமாடி கட்டடங்கள் என, 2 லட்சத்துக்கும் மேற்பட்டவை அடையாளம் காணப்பட்டு, அவற்றின் உரிமையாளர்கள் முறையாக சொத்து வரி செலுத்தும் வகையில், நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மாநகராட்சி வருவாய் துறை அலுவலர் பானு சந்திரன் கூறியதாவது:

கடந்த ஆண்டுகளில், முறையாக சொத்து வரி செலுத்தாத பெரு நிறுவனங்கள் உட்பட, 100 பேர் பட்டியல், மாநகராட்சி இணையதளத்தில் பதிவேற்றப்பட்டது. அதன் பயனாக, பெரும்பாலானோர் முறையாக சொத்து வரி செலுத்தி வருகின்றனர்.

அதேபோல், குடியிருப்புகள் மற்றும் சிறிய வகை வணிக கட்டடங்களில், சொத்து வரி பாக்கி உள்ளது. இதில், 5,000 ரூபாய்க்கு மேல் சொத்து வரி நிலுவை வைத்துள்ள, 2 லட்சம் பேருக்கு, க்யூ.ஆர்., குறியீடு உடன் கூடிய நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

அதை ‘ஸ்கேன்’ செய்து, ஆன்லைன் முறையில் எளிதில் சொத்து வரி செலுத்தலாம். நோட்டீஸ் அனுப்பியும் முறையாக சொத்து வரி செலுத்தாதோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்தாண்டு இதுவரை, 1,660 கோடி ரூபாய் சொத்து வரி வசூலிக்கப்பட்டுள்ளது. இது, கடந்த ஆண்டை விட, 250 கோடி ரூபாய் அதிகம். இந்த நிதியாண்டு மார்ச் 31 வரை இருப்பதால், நிலுவையில் உள்ள அனைத்து சொத்து வரியும் வசூலிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

– நமது நிருபர் –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *