பாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கிருஷ்ணன் கோவில் அகற்றம் தீக்குளிக்க முயன்ற சகோதரர்கள் கைது
திருவள்ளூர், ‘திருவள்ளூர் மாவட்டம், புல்லரம்பாக்கம் கிராமத்தில் பொது பாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள ருக்மணி, சத்யபாமா சமேத சந்தனகோபால கிருஷ்ணன் கோவிலை அகற்ற வேண்டும்’ எனக்கோரி, அதே பகுதியைச் சேர்ந்த வனிதா ஸ்ரீதர், 40, என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில், 2023 செப்டம்பரில் வழக்கு தொடுத்தார்.
அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம்,பொது பாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கோவிலை அகற்ற, 2023 டிசம்பர், 2024 ஆகஸ்டிலும் அடுத்தடுத்து உத்தரவிட்டது.
இதையடுத்து, 2024 நவம்பர் 14ல், கோவிலை அகற்றும் பணியில் வருவாய்த்துறையினர் ஈடுபட்டனர். பொதுமக்கள் எதிர்ப்பால் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டதை அடுத்து, போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள கிருஷ்ணர் கோவிலை இடித்து அகற்றும்படி, மீண்டும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, திருவள்ளூர் கோட்டாட்சியர் கற்பகம், தாசில்தார் ரஜினிகாந்த் உள்ளிட்ட வருவாய் துறை அதிகாரிகளும், போலீசாரும் நேற்று முன்தினம் நள்ளிரவு கோவிலுக்கு சென்றனர்.
கோவிலில் இருந்த கிருஷ்ணர், ராதா, ருக்மணி, விநாயகர் சிலைகளை அகற்றி, தாசில்தார் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைத்தனர்.
நேற்று காலை, போலீஸ் பாதுகாப்புடன், மூன்று பொக்லைன் இயந்திரங்கள் வாயிலாக கிருஷ்ணர் கோவிலை இடித்து தரைமட்டமாக்கினர்.
கோவில் இடிப்பால் ஆத்திரம் அடைந்த அக்கிராமத்தைச் சேர்ந்த சகோதரர்களான பாஸ்கர், 45, ரவிகுமார், 43, ஆகிய இருவர், உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.
பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவ்விருவரை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
மேலும் அசம்பாவிதம் நடக்காமல் இருக்க, அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.