சுகாதாரத்துறை சார்பில் காசநோய் விழிப்புணர்வு பேரணி

அண்ணாநகர்: உலக அளவில் காசநோயை, 2030க்குள் ஒழித்துவிட வேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்துள்ளது உலக சுகாதார நிறுவனம். 2025க்குள், இந்தியாவில் காசநோயை ஒழிப்பதுதான் தேசிய அளவிலான குறிக்கோள் என்று ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. காசநோயால் தினமும் 198 நாடுகளில் 4,000 பேர் இறக்கின்றனர். அன்றாடம் 28,000 பேர் புதிதாக காசநோயால் பாதிக்கப்படுகின்றனர். உலகின் காசநோயாளிகளில் பாதி பேர் வங்கதேசம், சீனா, இந்தோனேசியா, நைஜீரியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், தென் ஆப்பிரிக்கா ஆகிய 8 நாடுகளில் இருக்கின்றனர். உலக காசநோயாளிகளில் 27% பேர் இந்தியர்கள்.

காசநோய் பாதிப்புக்கு ஏழை, பணக்காரர், ஆண், பெண், மூன்றாம் பாலினத்தவர், குடிசைப் பகுதி, மாட மாளிகை வசிப்பிடம் என எந்த பேதமும் இல்லை. யாருக்கு வேண்டுமானாலும் காசநோய் வரக்கூடும். ஆனால், காசநோய்க்கும் பணியிடச் சூழலுக்கும், காசநோய்க்கும் ஊட்டச்சத்துக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. காசநோய், காற்றின் வழியாகப் பரவக்கூடிய ‘மைக்கோபாக்டீரியம் டியூபர் குளோசிஸ்’ என்கிற பாக்டீரியாவால் உண்டாகிறது. இந்தியாவில் 40% மக்களுக்கு காசநோய் தொற்று இருக்கிறது.

ஆனால், அது நோயாக மாறாத – உள்ளுறைந்த தொற்றாக உடலில் மறைந்திருக்கிறது. உலக சுகாதார நிறுவனம் மற்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் கணிப்பின் படி, எண்ணெய் மற்றும் எரிவாயு தொழிற்சாலைகள், சுரங்க தொழிற்சாலைகள், சிறைச்சாலைகள், மருத்துவமனைகள், சிலிக்கா தொழிற்சாலைகள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அதிகம் உள்ள தொழிற்சாலைகள் ஆகியவற்றில் வேலை செய்பவர்களுக்கு காசநோய் ஏற்படுவதற்கான ஆபத்து அதிகமாக உள்ளது.

சுகாதாரமற்ற வேலைவாய்ப்புச் சூழல், காற்று மாசு ஆகியன நோய்க்கான வாய்ப்பை அதிகரிக்கின்றன. இந்நிலையில், இந்த நோய் தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சென்னை மாநகராட்சி, 8வது மண்டலத்துக்கு உட்பட்ட அண்ணாநகர், வில்லிவாக்கம், அமைந்தகரை மற்றும் அரும்பாக்கம் பகுதிகளில், ‘காசநோய் இல்லாத தமிழ்நாடு’ என்ற தலைப்பில் சுகாதாரத்துறை சார்பில்,

விழிப்புணர்வு பேரணி நேற்று, டி.பி.சத்திரம் பிரதான சாலையில் உள்ள 100வது வார்டு பகுதியில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டவர்கள் பதாகைகளுடன் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பின்னர் உறுதிமொழியையும் ஏற்றனர். மண்டல அலுவலர் சுரேஷ், மண்டல நல அலுவலர் ஷீலா, தூய்மை அலுவலர் விஜயகுமார், சுகாதார ஆய்வாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் இதில் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *