சேப்பாக்கம் -ஆடம்ஸ் சாலை வரை மாநில இணைய வழி குற்றப்பிரிவு சார்பில் சைபர் குற்றங்களை தடுக்கும் வகையில் 5000 பேர் விழிப்புணர்வு நடைபயணம் நாளை மாலை நடைபெறுகிறது

சென்னை: சைபர் குற்றங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நாளை மாலை சேப்பாக்கம் மைதானம் முதல் ஆடம்ஸ் சாலை வரை ‘சென்னை 1930 விழிப்புணர்வு நடைபயணம்’ நிகழ்ச்சி நடக்கிறது. இந்த நடைபயணத்தில் 5 ஆயிரம் பேர் கலந்து கொள்கின்றனர். தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் அலுவலகம் சார்பில் நேற்று ெவளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சைபர் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் பெரும்பாலும் வியட்நாம், லாவோஸ், கம்போடியா, மியான்மர் போன்ற நாடுகளிலிருந்து செயல்படுகின்றனர்.

இவர்களை அடையாளம் காண்பது மிகவும் சவாலான விஷயம் ஆகும். சமீபகாலமாக சைபர் குற்றங்கள் வேகமாக அதிகரித்து வருவதாலும், புகாரளிப்பதில் தாமதம் ஏற்படுவதாலும் அதிக நிதி இழப்புகள் ஏற்படுகின்றன. சைபர் நிதி குற்றங்களை தடுக்க ‘உதவி எண் 1930’ உள்ளது. சைபர் குற்றங்களில் பாதிக்கப்பட்டவர்கள் இதில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். இதுதொடர்பாக, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தமிழ்நாட்டின் இணையவழி குற்றப்பிரிவு சார்பில், சேப்பாக்கம் வாலாஜா சாலையில் உள்ள கிரிக்கெட் ஸ்டேடியம் முன்பு இருந்து பிரஸ் கிளப் சாலை வழியாக சுவாமி சிவானந்தா சாலையில் உள்ள ஆடம்ஸ் பாயின்ட் வரை நாளை மாலை 4 மணிக்கு, சைபர் குற்றங்களை தடுக்க உதவும் எண்ணை குறிக்கும் வகையில் ‘1930 மீட்டர் நடைபயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நடைபயணத்தை உள்துறை செயலாளர் தீரஜ் குமார் கொடி அசைத்து தொடங்கி வைக்கிறார்.

காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் தலைமையில் நடக்கும் நடைபயணத்தில் இணைய வழிக்குற்றப்பிரிவு கூடுதல் இயக்குநர் சந்தீப் மிட்டல், உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். இந்த நடைபயணத்தின் போது தேர்வு செய்யப்பட்ட 30 பிரபலமான சைபர் குற்றங்கள் குறித்த கர்ட்டூன் தொடர் ‘சைபர் குற்றங்களும் தம்பியின் வழிகாட்டலும்’ என்ற தலைப்பில் வெளியிடப்பட உள்ளது. சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு திரைப்படத்தையும் வெளியிடப்படுகிறது. இந்த விழிப்புணர்வு நடைபயணத்தில் 5 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளனர்.  இவ்வாறு அதில் கூறுப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *