விதிமீறும் நிர்வாகிகளை கண்டித்து பச்சையப்பன் கல்லூரியில் மாணவர்கள் போராட்டம்

அண்ணாநகர்: பல்கலைக்கழக மானிய குழு மற்றும் உயர்க்கல்வி துறை விதிமுறைகளுக்கு முரணாக செயல்படும் பச்சையப்பன் கல்வி அறக்கட்டளை நிர்வாகி பார்த்திபன், செயலாளர் துரைக்கண்ணு ஆகியோர் உடனடியாக பதவி விலக வலியுறுத்தி வலியுறுத்தி, அக்கல்லூரி மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் நேற்று காலை போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கூறுகையில், ‘‘கலை மற்றும் அறிவியல் கல்லூரி பிளாக்கின் கதவை மூடியே வைத்துள்ளனர்.

இளநிலை படிப்புகளுக்கு மூடுவிழா நடத்துகின்றனர். கல்லூரியின் பிரதான வாயில் எப்போதும் மூடியே இருக்கிறது. கல்லூரி கல்வி மேம்பாட்டு குழுவை அமைக்க வேண்டும். பச்சையப்பன் அறக்கட்டளை செயலாளர் துரைக்கண்ணு கல்லூரி விஷயங்களில் தலையிடுகிறார். இது பல்கலைக்கழக மானியக்குழு விதிகளுக்கும் உயர்கல்வி சட்டத்துக்கும் முரணானது. எனவே, தமிழக அரசு இந்த விஷயத்தில் தலையிட்டு பச்சையப்பன் அறக்கட்டளையின் கீழ் செயல்படும் 6 கல்லூரிகளையும் அரசே ஏற்று நடத்த வேண்டும்.

கல்லூரியின் முதல்வர் அறக்கட்டளை செயலாளருடைய ஊதுகுழலாக செயல்படுகிறார். உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், போராட்டங்களை முன்னெடுக்க உள்ளோம்,’’ என்றனர். இதனிடையே பிரதான வாயிலில் போராட்டம் நடத்துவதற்கு போலீசார் அனுமதி மறுத்ததால் பின்பக்க வாசலில் பூட்டியிருந்த கதவை தள்ளிவிட்டு உள்ளே நுழைந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். இதன்காரணமாக கீழ்பாக்கம் உதவி ஆணையர் துரை தலைமையில், 150க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுத்தப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *