‘பிங்க்’ ஆட்டோ ஓட்டுநர் 250 மகளிருக்கு பயிற்சி
சென்னை:பெண்கள் மற்றும் சிறுமியரின் பாதுகாப்பு உறுதி செய்யும் வகையில், பெண் ஓட்டுநர்களைக் கொண்டு செயல்படுத்தக் கூடிய ‘பிங்க்’ ஆட்டோ திட்டத்தை, தமிழக அரசு, கடந்தாண்டு அக்டோபர் மாதம் அறிவித்தது.
முதற்கட்டமாக சென்னையில் வசிக்கும் ஓட்டுநர் உரிமம் பெற்ற, 25 முதல் 45 வயதிற்கு உட்பட்ட 250 பெண் ஓட்டுநர்களுடன், இத்திட்டத்தை செயல்படுத்துவதாகவும் அறிவித்தது.
அதன்படி, தகுதி வாய்ந்த பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. தற்போது திட்டத்திற்கான நபர்கள் தேர்வுச் செய்யப்பட்டுள்ளனர்.
திட்டத்தின்படி, 250 ஓட்டுநர்களுக்கு தலா ஒரு லட்சம் ஆட்டோ வாங்க மானியம் வழங்கப்படுகிறது.
அவர்களுக்கு தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் டி.என். ஆட்டோ ஸ்கில்ஸ் நிறுவனம் சார்பில், ஆட்டோக்களை பாதுகாப்பாக இயக்குவது, சுய தற்காப்பு, டிஜிட்டல் முறையில் பணம் பெறுவது, ஆட்டோக்களில் இணைக்கப்பட்டிருக்கும் ஜி.பி.எஸ்., கருவியின் செயல்பாடு மற்றும் அவசர காலங்களில் காவல்துறையை தொடர்புக் கொள்வது குறித்த பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.