சோழிங்க நல்லுார் வணிக மனைகள் ‘இ – ஏலம்’ முறையில் விற்பனை

சென்னை:சோழிங்கநல்லுார், திருவான்மியூர், சித்தாலப்பாக்கம் பகுதிகளில் உள்ள வணிக மனைகளை, ஆன்லைன் முறையிலான, ‘இ – ஏலம்’ வாயிலாக விற்பனை செய்யப்படும் என, வீட்டுவசதி வாரியம் அறிவித்துள்ளது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், குடியிருப்பு திட்டங்களை வீட்டுவசதி வாரியம் செயல்படுத்தி வருகிறது. இதில், வணிக பயன்பாட்டுக்கான மனைகளையும் வாரியம் உருவாக்குகிறது. வணிக மனைகள் ஏல முறையில்தான் விற்கப்படுகின்றன.

ஆனால், இதற்கான பணிகள் அனைத்தும் இதுவரை, மேனுவல் முறையில்தான் மேற்கொள்ளப்பட்டன. இதில், பெரும்பாலான பகுதிகளில் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், தங்களுக்குள் பேசி வைத்துக்கொண்டு, வணிக மனைகளுக்கான ஏலத்தில் விலை உயர்வதை தடுக்கின்றன.

இதுபோன்ற முறைகேடுகளை தடுக்க, ஆன்லைன் முறையில் ஏலத்தை நடத்த வாரியம் முடிவு செய்தது. இதன்படி, மதுரையில் சில திட்டங்களில், ஆன்லைன் முறையில் ஏலம் அறிவிக்கப்பட்டது. ஆனால், ஒருசில இடங்களில் மட்டுமே, இ – ஏலம் நடந்தது; இதற்கு ஏலம் எடுப்பவர்கள் தரப்பில் போதிய ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், சென்னையில் சோழிங்கநல்லுார், சித்தாலப்பாக்கம், திருவான்மியூர் திட்டப்பகுதிகளில், 26 வணிக மனைகளை இ – ஏலம் முறையில் விற்க வாரியம் முடிவு செய்துள்ளது. வாடகை கடைகளை ஒதுக்கீட்டிற்கும், இ – ஏலம் நடத்தவும் வாரியம் முடிவு செய்துள்ளது.

இதற்கான அறிவிப்பை, வீட்டுவசதி வாரியத்தின் பெசன்ட் நகர் கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ளது. இது தொடர்பான கூடுதல் விபரங்கள் பெற, www.tnhb.tn.gov.in என்ற இணையதளத்தை அணுகலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *