வீடு ஒப்படைக்க தாமதித்த நிறுவனம் ரூ.3 லட்சம் இழப்பீடு அளிக்க உத்தரவு
சென்னை:வீடு ஒப்படைக்க, 11 மாதங்கள் தாமதம் செய்த கட்டுமான நிறுவனம், மூன்று லட்சம் ரூபாய் இழப்பீடு அளிக்க வேண்டும் என, ரியல் எஸ்டேட் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், தையூர் கிரதமத்தில், ‘அக் ஷயா’ நிறுவனம் சார்பில், ‘டுடே’ என்ற பெயரில் அடுக்குமாடி குடியிருப்பு திட்டம் அறிவிக்கப்பட்டது. கடந்த, 2014ல் இத்திட்டத்தில் வீடு வாங்க, ஆனந்த் பிரபாகரன் என்பவர் ஒப்பந்தம் செய்தார்.
வீட்டிற்காக, 35.77 லட்ச ரூபாய் செலுத்தி இருந்தார். ஒப்பந்தப்படி, 2016ல் கட்டுமான நிறுவனம் வீட்டை ஒப்படைத்து இருக்க வேண்டும். ஆனால், 11 மாதங்கள் தாமதமாக அந்நிறுவனம், 2017 ல் வீட்டை ஒப்படைத்தது.
இதுகுறித்து, ஆனந்த் பிரபாகரன், ரியல் எஸ்டேட் ஆணையத்தில் முறையிட்டார். இந்த வழக்கில் ஆணையத்தின் விசாரணை அலுவலர் என்.உமாமகேஸ்வரி பிறப்பித்த உத்தரவு:
கட்டுமான நிறுவனம் ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட காலத்தில் வீட்டை ஒப்படைக்கவில்லை என்பது உறுதியாகிறது. தாமத காலத்துக்கான வீட்டு வாடகையை, கட்டுமான நிறுவனம் திருப்பித்தர வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கை ஏற்கப்படுகிறது.
எனவே, வீடு ஒப்படைப்பதில் தாமதம் செய்யப்பட்ட, 11 மாதத்துக்காவ வாடகை செலவு தொகை, 99,000 ரூபாய்; மன உளைச்சலுக்கான நிவாரணமாக, மூன்று லட்சம் ரூபாய்; வழக்கு செலவுக்காக, ஒரு லட்சம் ரூபாயையும், கட்டுமான நிறுவனம் மனுதாரருக்கு அளிக்க வேண்டும். அடுத்த, 90 நாட்களுக்குள் இந்த உத்தரவை கட்டுமான நிறுவனம் நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.