கஞ்சா வியாபாரிகள் 4 பேர் பிடிபட்டனர்
அண்ணா நகர்:பெரம்பூர், ஜமாலியா பேருந்து நிறுத்தத்தில், அண்ணா நகர் மது விலக்கு போலீசார், நேற்று முன்தினம் இரவு, மாறுவேடத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருனர். ரயில் நிலையத்தில் இருந்த வெளியில் வந்த இருவரின் உடைமைகளை, சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை செய்தனர். அதில் 9 கிலோ கஞ்சா இருப்பது தெரிந்தது. விசாரணையில், பழனியைச் சேர்ந்த துர்க்கைராஜ், 19, வீராசாமி, 18, என்பதும் தெரிந்தது. இருவரும், ஒடிசாவில் இருந்து ரயிலில் கஞ்சா கடத்தி வந்து, அங்கிருந்து பழனி கொண்டு சென்று விற்க முயன்றது தெரிந்தது. இருவரையும் நேற்று போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
* ஓட்டேரி, யாகூப் கார்டன் தெரு பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக ஓட்டேரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசாரின் சோதனையில், ஓட்டேரியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனரான அஜித்குமார், 28, என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்து 1.3 கிலோ கஞ்சா, மூன்று மொபைல்போன்கள், ஆட்டோ, பைக் பறிமுதல் செய்யப்பட்டது.
* பொன்னேரி, தடம் பெரும்பாக்கம் பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சந்தேகப்படும்படி வந்த ‘யமஹா எம்.டி. 15 பைக்கை நிறுத்தி சோதனை செய்தனர். விசாரணையில் பொன்னேரி, தேவமா நகரைச் சேர்ந்த கவுதம், 25, என தெரிந்தது. அவர் வைத்திருந்த பையில், 1.200 கிராம் கஞ்சா இருந்தது. ஆந்திராவில் இருந்து கஞ்சா வாங்கி வந்து பொன்னேரி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து கவுதமை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஆன்லைனில் கஞ்சா விற்ற இருவர் கைது
திரு.வி.க., நகர்:திரு.வி.க., நகர் பல்லவன் சாலை விளையாட்டு மைதானத்தில் சிலர் கஞ்சா விற்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. குறிப்பிட்ட இடத்திற்குச் சென்ற திரு.வி.க., நகர் போலீசார், அங்கிருந்த இருவரை பிடித்து விசாரித்து, அவர்கள் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
இவர்கள் ஆந்திர மாநிலம், சித்துாரில் குமாரி என்பவரிடமிருந்து, 25,000 ரூபாய் பணம் கொடுத்து கஞ்சா வாங்கி வந்து, இங்கு ‘ஆன்லைன்’ வாயிலாக விற்பனை செய்தது தெரிந்தது.
பிடிபட்டவர்களில் 17 வயதுடைய சிறுவன், கெல்லீஸ் காப்பகத்தில் சேர்க்கப்பட்டான்.
மற்றொருவரான பெரவள்ளூரைச் சேர்ந்த நிகேஷ்,19, என்பவரை, போலீசார் கைது செய்தனர்.