கண் பார்வையை அதிகரிக்க மெழுகுவர்த்தி யோகா பயிற்சி
சென்னை:”மெழுகுவர்த்தி யோகா பயிற்சி வாயிலாக, கண் பார்வை திறன் அதிகரிப்பதுடன், ஞாபக சக்தியையும் அதிகரிக்க முடியும்,” என, அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவமனையின் கைநுட்பத்துறை தலைவர் தீபா கூறினார்.
சென்னை அரும்பாக்கம், யோகா மற்றும் இயற்கை மருத்துவமனையில், முதியோர்களுக்கான பிரத்யேக மருத்துவ முகாம் நேற்று நடந்தது. இதில், வயது முதிர்வால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்கும் வகையில், முதியவர்களுக்கு கண், பல், எலும்பு தேய்மானம் தொடர்பான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த முகாமில், 250க்கும் மேற்பட்ட முதியவர்கள் பயன்பெற்றனர்.
இதுகுறித்து, கைநுட்பத்துறை தலைவர் தீபா கூறியதாவது:
வயது முதிர்வால் ஏற்படும் பாதிப்புகளுக்கு, யோகா மற்றும் இயற்கை மருத்துவம் வாயிலாக குணப்படுத்த முடியும்; பாதிப்பு தீவிரமடையாமலும் தடுக்க முடியும். வயது முதிர்வால் ஏற்படும் எலும்பு தேய்மானத்தை, இயற்கை முறையிலான உணவுகள், யோகா பயிற்சிகள் வாயிலாக, எலும்பு அடர்த்தியாக்க முடியும்.
கண் பார்வை திறனை அதிகரிக்கவும் யோகா பயிற்சிகள் உள்ளன. மெழுகு வர்த்தியை ஏற்றி வைத்து, 10 நிமிடங்கள், இமைகள் அசைக்காமல் பார்க்க வேண்டும். அப்போது, ஞாபக சக்தி அதிகரிப்பதுடன், மன அழுத்தமும் குறையும்.
மேலும், கண் பார்வை திறன் அதிகரிப்பு, சர்க்கரை நோயையும் கட்டுப்படுத்தும். இதுபோன்ற, பல்வேறு வகையான யோகா பயிற்சிகள், இயற்கை உணவு முறைகள் வாயிலாக முதியவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.